Monday, December 5, 2016
புரட்சி தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா
புரட்சி தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா
தமிழ்த்திரை
உலகில் புகழ் மிக்க நட்சத்திரமாகத் திகழ்ந்த சந்தியா -ஜெயராமன் தம்பதிகளின்
இரண்டாவது குழந்தையாக, 1948 பிப்ரவரி 24ஆம் தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா
பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகரில் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச்
சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர்
மைசூர் மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூர் பிஷப் கார்டன்
பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில்
படிப்பைத் தொடர்ந்தார்.
படிப்பில்
முதல் மாணவியாகத் திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம்
நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட
ஜெயலலிதா, இசைக்
கருவிகளை மீட்டவும், இனிமையாகப்
பாடவும் தேர்ச்சி பெற்றார். 1964 ஆம்
ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய் மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி,
தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக்
கற்றுக்கொண்டார். மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை
ஏற்பட்டு, திரை உலகப்
பிரவேசம் நடந்தது.
ஜெயலலிதாவின்
சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி
ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார்.
ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.
தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற
ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம். அந்தப் படத்தயாரிப்பின் போதே
பி.ஆர்.பந்துலுவின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு
ஜோடியாக நடித்தார். 2 படங்களும்
100 நாட்கள் ஓடி
வெற்றி பெற்றன.
தொடர்ந்து
பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். "வெண்ணிற ஆடை" படம்
வெளிவருவதற்கு முன், ஜனாதிபதி
வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த "எபிசில்" (லிகிதம்) என்ற
ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்தப் படத்தைப் பார்த்தவர்கள்,
"இதில் ஜெயலலிதா
பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்!" என்று
வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள். முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா,
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,
இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார்.
சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ்,
ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள்
எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971ம் ஆண்டு காலமானார்.
தாயாரின்
நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா
நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் `வேதா') ஜெயலலிதாவின் 100வது படமான "திருமாங்கல்யம்" 1977ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில்
நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார். 1980ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற
சினிமா தான் அவர் நடித்து கடைசியாக வெளி வந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.
சினிமா
உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982ல்
அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். ஜெயலலிதாவின் அரசியல்
பாதை முட்களால் நிரம்பியது. எந்த ஒரு தலைவரையும் போலவே ஜெயலலிதாவும் சவால்களால்
சூழப்பட்டவர்தான். ஆனால் அத்தனை சவால்களையும் ஜஸ்ட் லைக் தட் தகர்த்தெறிந்து
தொடர்ந்து முன்னேறும் ஒரு வித்தியாசத் தலைவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகம் இல்லை.
அவர் அரசியலுக்கு வந்த அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி,
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக
நியமித்தார். 1983 ஆம் ஆண்டு
பிப்ரவரியில் நடைபெற்ற திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து முதன் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் முன்னின்று
வழி நடத்திய முதல் தேர்தல் பிரச்சாரத்திலேயே அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து
கழக வேட்பாளருக்கு மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தார்.
1984 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1989 ஆம் ஆண்டில், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை
உறுப்பினர் பதவியை வகித்தார். 1984 ஆம் ஆண்டு
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலமின்றி நோய்வாய்ப்பட்டு
அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த போது, 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம், நாடாளுமன்ற
மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை
சந்திக்க நேர்ந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் களத்தில்
இல்லாதபோது, அவருடைய
இடத்தில் இருந்து, அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரத்தினை
முன்னின்று வழி நடத்தி, கூட்டணிக்கு
மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.1987-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
மறைவுக்குப் பின், அ.இ.அ.தி.மு.க.
இரண்டாக பிளவுபட்டது.
1988 ஜனவரியில்
முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஜானகி. இரு அணிகளில் ஜானகிக்கு ஆதரவு
அதிகமிருந்தாலும் ஜெயலலிதா வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மைனாரிட்டி ஜானகி
அரசாகவே அது இருந்தது. 3 வாரத்திற்குள்
வேறு மெஜாரிட்டியை நிரூபித்தாக
வேண்டுமே.....
62 இடங்கள்
வைத்துள்ள காங்கிரஸ் ஆதரித்தால் போதும்...ஆட்சி பிழைத்துக்கொள்ளும் என்று முடிவு
செய்த ஆர்.எம்.வீரப்பன் ., நடிகர்
சிவாஜி கணேசன் மூலம் ராஜீவ் காந்திக்கு தூது விட்டார். ஆனால், பிளவு பட்ட அதிமுக., வை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறி
விட்டார் ராஜீவ் இதற்கிடையில் ஜெயலலிதாவும் டெல்லி சென்று ராஜீவிடம் ஆதரவை
கோரினார். ஜெயலலிதாவிடமும் அதே பதிலை சொன்னார். சட்டசபையில் ஜானகியை எதிர்த்து
காங்கிரஸ் வாக்களிக்கும் என்றும் அறிவித்தார்.
வேறு
வழியின்றி தி.மு.க.,வின் 20 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஆர்.எம்.வீ,
ராசாராம், மாதவன் போன்றோர் இறங்கினர். அ.தி.மு.க.,வின் எந்த பிரிவையும் ஆதரிக்கப்போவதில்லை
என்று தி.மு.க., செயற்குழுவில்
தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் ஆதரவு தரமுடியாது என்று கை விரித்து விட்டார் கலைஞர்
( அப்படி சொன்னது எத்தனை பெரிய தவறென்று இப்போது உணர்ந்திருப்பார் கலைஞர். அவர்
மட்டும் அன்று ஜானகிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் 98+20=118 என்ற எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில் ஜானகி அரசு
காப்பாற்றப்பட்டிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயாவும் அரசியல் களத்திலிருந்து
அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்).
ஜனவரி 28 அன்று சட்டமன்றம் கூடியதும் ஜானகி-ஜெயா
அணிகளுக்கிடையே பெரும் கலவரம் வெடித்தது. மைக், ஒலிபெருக்கிகள் உடைக்கப்பட்டன. பல எம்.எல்.ஏ.,க்களின் மண்டை உடைந்து ரத்தம் ஓடியது.
கட்சி மாறி வாக்களித்ததால்...கட்சி கட்டுப்பாட்டை மீறிய 33 எம்.எல்.ஏ.,க்களை பதவி
நீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். ஜானகி கொண்டுவந்த
தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் அறிவித்தார்.
ஆனால்,
சட்டஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக கூறி
ஜானகி ஆட்சி வெறும் 24 நாட்களில்
கலைக்கப்பட்டது பரிதாபமான க்ளைமேக்ஸ்.
அதன் பின்
ஒரு வருடம் ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமலில் இருந்தது.
1989 ஜனவரியில்
தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு... ஜானகி அணிக்கு
இரட்டைப்புறா சின்னமும், ஜெயலலிதாவிற்க்கு
சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஜானகியுடன் சிவாஜியின் தமிழக முன்னேற்ற
முன்னணியும், ஜெயலலிதாவுடன்
கம்யூனிஸ்ட்டும் கூட்டணி அமைத்தனர். தி.மு.க., பலமான கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் ஜெயித்தால்
மூப்பனார் முதல்வர் என்ற கோஷத்துடன் தனித்து போட்டியிட்டது.
இந்த
தேர்தல் முடிவில்...தி.மு.க., மீண்டும்
அதாவது 13 வருட இடைவெளிக்கு
பிறகு ஆட்சியை பிடித்தது. அதே நேரம் 198 இடங்களில் போட்டியிட்ட ஜெ., அணிக்கு 27 இடங்களும்,
175 இடங்களில்
போட்டியிட்ட ஜானகி அணிக்கு 1 இடமும்
கிடைத்தது. (நெல்லை மாவட்டம்
சேரன்மாதேவியில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தான் அந்த
ஒருவர்).
ஆண்டிப்பட்டியில்
போட்டியிட்ட ஜானகியம்மாள் 22,647 வாக்குகள்
பெற்று தி.மு.க., வேட்பாளர் ஆசையனிடம் தோல்வியை தழுவி மூன்றாம்
இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். அதே நேரம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட
ஜெயலலிதா 33,191 வாக்குகள்
பெற்று வெற்றிபெற்றார். அங்கு ஜெயாவை எதிர்த்து போட்டியிட்ட ஜானகி அணி
வேட்பாளர் நடிகை வென்னிற ஆடை நிர்மலா
வெறும் 1512 வாக்குகள்
மட்டுமே பெற்று டெபாசிட் இழந்திருந்தார். பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை
பெற்றது. இதனையடுத்து, இவர் தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்
இதில்
ஜானகி அணிக்கு மொத்தம் 21,78,071 (9%) வாக்குகளும், ஜெயலலிதா
அணிக்கு மொத்தம் 50,54,138 (21%) வாக்குகளும் கிடைத்திருந்தது.
இந்த தேர்தல்
தோல்விக்கு பொறுப்பெற்று ஜானகி, தனது
பிரிவை ஜெயலலிதா அணியுடன் இணைத்துவிட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கினார். அதன் பிறகே
ஒருங்கிணைந்த அண்ணா.தி.மு.க., வின் பொது
செயலாளராக ஜெயலலிதா ஆனார். இரட்டை இலை சின்னமும் ஜெயாவிற்கு கிடைத்தது. அரசியல்
வானில் எம்.ஜி.ஆரின் வாரிசாகவும் பிரகாசித்தார்.
இதனையடுத்து,
1989 ஆம் ஆண்டு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு “இரட்டை இலை” தேர்தல்
சின்னத்தை மீட்டுக் கொடுத்தார்
அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மருங்காபுரி, மதுரை கிழக்கு, பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் இருந்து நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
ஜெயலலிதாவையும் அரசியலிலிருந்து
விலக்கும் முயற்சிகள் அரசியல் களத்தில் தொடங்கிய
போது தான் விஸ்வரூபம் எடுத்தார் அவர். 1989
மார்ச் 25 அன்று தமிழக சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவத்துக்குப் பின்
பெருத்த அவமானத்தோடு "இனி இந்த அவைக்குள்
முதல்வராகத்தான் நுழைவேன்" என்று சபதமிட்டுப் புறப்பட்ட ஜெயலலிதா, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்தச் சபதத்தை நிறைவேற்றினார். தன்னுடைய 43-வது
வயதில் 1991-ல் முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவரே தமிழகத்தின் இளவயது முதல்வர்..
மேலும்,
1991 ஆம் ஆண்டு
நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் மற்றும் அதன் தோழமை கட்சிகள், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று,
100 விழுக்காடு வெற்றி
என்ற வரலாற்று சாதனை படைக்க காரணமாக இருந்தார். இவர் தலைமையிலான கூட்டணி முழு
வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தது.
1991 முதல் 1996 வரை அவர் ஆட்சி புரிந்த விதம் தமிழக
வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. அந்த காலகட்டத்தில் தான் அவர் மிகப் பெரிய அளவில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பின்னாளில்
வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தான் இவரை சிறைக்கும்
அனுப்பி வைத்தது. இன்று வரை விடாமல் தொடர்கிறது இந்த வழக்கு.
1996ம் ஆண்டில்
நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார் ஜெயலலிதா.
1998 ஆம் ஆண்டு
நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்
கூட்டணி மொத்தமுள்ள 40
தொகுதிகளில், 30
தொகுதிகளில் வெற்றியடைந்தது.
2001 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில், இவர் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகக் கூட்டணி 234
தொகுதிகளில், 195-ல் வெற்றி
பெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் 132 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
இவர், 14.5.2001 அன்று
இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டி
சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்
கூட்டணி 68 இடங்களை
கைப்பற்றியது. பின்னர், இவர்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.
இவரது
சீரிய தலைமையின்கீழ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்புள்ள,
பயனுள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது.
அப்போதைய அரசின் ஒவ்வொரு தவறும் சுட்டிக்காட்டப்பட்டது. தேவைப்படும் இடங்களில்,
எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில்
போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும்
நடத்தப்பட்டன. தனது தொடர் அறிக்கைகளின் மூலம் அன்றைய மைனாரிட்டி தி.மு.க. அரசின்
தவறுகளை தொடர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். பல்வேறு போராட்டங்களை தாமே
தலைமை தாங்கி நடத்தினார். இவரது தலைமையில் கோவை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற எழுச்சிமிகு பொதுக் கூட்டங்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்
ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த மூன்று பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்களும்
ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் வகையில் அமைந்தன.
இதனையடுத்து,
2011 ஆம் ஆண்டு
நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தலைமையிலான கூட்டணி, தி.மு.க.
தலைமையிலான கூட்டணியை முற்றிலும் வீழ்த்தி மீண்டும் ஆட்சியை அமைத்தது. மொத்தமுள்ள 234 இடங்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்
கூட்டணி 203 இடங்களில்
வெற்றி பெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் 150 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
இவர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பெருவாரியான வாக்குகள்
வித்தியாசத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 16.5.2011 அன்று மூன்றாவது முறையாக தமிழகத்தின்
முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின் திருச்சி மேற்கு, சங்கரன்கோவில் மற்றும் புதுக்கோட்டை
தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும், 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித்
தேர்தல்களிலும், இதனைத்
தொடர்ந்து நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தார்.
இந்த
நிலையில்தான் 2014ம் ஆண்டு
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. தான் பிறந்த
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் மறக்க
முடியாத ஒன்று. 2015ம் ஆண்டு
சிறை தண்டனையிலிருந்தும், சொத்துக்
குவிப்பு வழக்கிலிருந்தும் மீண்டு வந்தார் ஜெயலலிதா. மீண்டும் முதல்வராகப்
பதவியேற்றார்.
ஜெயலலிதா
தலைமையில் அதிமுகவின் சாதனைகள்
1991 ஆம் ஆண்டு
மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
1998 ஆம் ஆண்டு
நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக
அங்கம் வகித்தது.
2001 ஆம் ஆண்டு
மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
2011 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக
பதவியேற்றார்.
2011 ஆம் ஆண்டு
செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது.
2014 ஆம் ஆண்டு
நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில்
தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று
வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற
பெருமையையும் பெற்றது.
2016 ஆம் ஆண்டு
நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல்
நேரடியாகவும், 7இல் அதிமுக
கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும்
போட்டியிட்டு 134
தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும்
ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான்.
மேலும் 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத்
தேர்தலில் 4
உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில்
அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை +
13 மாநிலங்களவை) ஆக
உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
அது
மட்டுமின்றி 2011 சட்டமன்ற
தேர்தல், 2011
உள்ளாட்சித் தேர்தல், 2014
நாடாளுமன்றத் தேர்தல், 2016
சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.
ஜெயலலிதா 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார். இவர் நிறைவேற்றிய
திட்டங்கள் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களையும் சென்றடைந்துள்ளது.
அவர் சிந்தனையில் உதித்தசில அரிய
திட்டங்களை திரும்பி பார்ப்போம்.
மழை நீர் சேகரிப்பு திட்டம்
நிலத்தடி நீரை பெருக்கும் விதமாக
மழைநீர் சேகரிப்பு திட்டத்தைஉருவாக்கினார். இதன் மூலம் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு
கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயர
வழிவகுத்தார்.
மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
தமிழகத்தில் முதன் முறையாக முழுவதும்
பெண்களால் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்களை அமைத்தார். மேலும் காவல்துறையில் 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார்.
பெண் கமாண்டோ படை
2003ல் இந்தியாவுக்கே வழிகாட்டும் விதமாக
முதன்முறையாக, தமிழகத்தில் பெண்கள் கமாண்டோ படையை
ஏற்படுத்தினார்.
புதிய வீராணம் திட்டம்
சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை
பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் புதிய வீரணாம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்.
லாட்டரி ஒழிப்பு
ஏழை எளிய மக்களின் வருமானத்தை சுரண்டிய,
லாட்டரி சீட் கலாசாரத்தை ஒழிக்கும் விதமாக,
அதனை முற்றிலுமாக தடை செய்து வெற்றி கண்டார்.
வீடியோ கான்பரன்ஸ்
கைதிகளை நீதிமன்றத்தில் நேரில்
ஆஜர்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களை போக்கும் விதமாக, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தும் திட்டத்தை உருவாக்கினார்.
சுய உதவிக்குழு
பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும்
விதமாக சுய உதவிக்குழு திட்டத்தை கொண்டு வந்தார்.
இலவச சைக்கிள்
அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச
சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினார்.
நனவாகிய அரசு வேலை
முடங்கிக் கிடந்த தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்தை சீரமைத்து நேர்மையாகவும், துரிதமாகவும் செயல்படும் தேர்வாணையமாக மாற்றிக்காட்டினார். இதன்
மூலம் தேர்வாளர்களின் நன்மதிப்பை பெற்றார். 2011 முதல் 2016 வரை சுமார் 30 ஆயிரம் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட்டது. அதே போல, காவல் துறையில் 20 ஆயிரம் இடங்கள், டி.இ.டி., தேர்வு மூலம் 25 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் என போட்டித் தேர்வுகளின் மூலம் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வழிகாட்டியாக
திகழ்ந்தார்.
அம்மா உணவகம்
'தனி மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு
ஏற்ப, ஏழை மக்களின் பசித்துயர் நீக்கும்
வகையில் 'அம்மா உணவகம்' என்ற திட்டத்தை 2013 பிப்., 19ம் தேதி சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் தொடங்கப்பட்டது.
இதில் இட்லி ஒரு ரூபாய், பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை, கறிவேப்பிலை, தயிர் சாதம் ஆகியவை 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது. பின் இது சென்னை மாநகராட்சிக்கு
உட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவுபடுத்தப்பட்டது.
அதன் பிறகு தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சி மற்றும் முக்கிய நகரப் பகுதிகளிலும்
திறக்கப்பட்டன.
அம்மா குடிநீர்
பயணம் செய்யும் மக்களின் தாகம்
தீர்க்கும் வகையில் 10 ரூபாய்க்கு 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை 2013 செப்., 15ல் தொடங்கினார். தமிழ்நாடு
போக்குவரத்து கழகம் இதனை செயல்படுத்துகிறது. தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது.
தாலிக்கு தங்கம்
இதன்மூலம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு
இல்வாழ்க்கை அமைய காரணமானார். பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
மேலும் டிகிரி படித்த பெண்களுக்கு 50
ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
இலவச லேப்டாப் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் திறனை
மேம்படுத்தும் விதமாக, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை
செயல்படுத்தினார்.
அம்மா முகாம்
மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற
அம்மா திட்டத்தை தொடங்கினார். மக்கள் அதிகாரிகளை தேடி போவதால் காலவிரயம்
ஏற்படுகிறது.இதை தடுக்கும் விதமாக அதிகாரிகளே மக்களை தேடி சென்று அவர்களின்
மனுக்களை பெற்று, தகுதியான நபர்களுக்கு ஒரே நாளில்
சான்றிதழ்களை வழங்குவதே இதன் நோக்கம். இத்திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,
நீக்கல், முகவரி மாற்றம் செய்தல், சாதிச்சான்றிதழ்,
வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள், பட்டா மாறுதல் போன்றவை வழங்கப்பட்டது.
கோயில்களில் அன்னதானம்
பழநி, ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்பட்டது. அதே போல தமிழகம் முழுவதும் 106 முக்கிய கோயில்களில் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பென்னிகுவிக் மரியாதை
தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் பயன்பெறும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கிற்கு
மரியாதை செலுத்தும் விதமாக அவருக்கு, தேனி
மாவட்டத்தில் லோயர் கேம்பில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
மின்சார சலுகை
இந்த முறை 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம்
வசூலிக்கப்படமாட்டது என்ற திட்டத்தை செயல்படுத்தினார்.
அரசு கேபிள் டிவி
தனியார் நிறுவனங்களின் கைகளில் இருந்த
கேபிள் 'டிவி'யை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்து, அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் மாதத்துக்கு 70 ரூபாய் கட்டணத்தில் மக்களுக்கு சேனல்கள் ஒளிபரப்பப்பட்டன.
தொட்டில் குழந்தை திட்டம்
1991ல் தமிழக முதல்வராக முதன்முறையாக
ஜெயலலிதாக பதவியேற்றார். அப்போது சில பகுதிகளில் பெண் சிசுக்கொலை எனும் கொடுமை
இருந்தது. இதை தடுக்கும் விதமாக 1992ல்
ஆதரவற்ற பெண் குழந்தைகளை அரசே வளர்க்கும் என அறிவித்து, 'தொட்டில் குழந்தை' திட்டத்தை தொடங்கினார். இந்தியாவிலேய
மகத்தான திட்டமாக இது உருவெடுத்தது. முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் இத்திட்டம்
தொடங்கப்பட்டது. 2001ல் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா இத்திட்டத்தை மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தினார். இதனால் தமிழகத்தில் 2001ல் 1000 குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்ற நிலை மாறி, 2011ல் 946 ஆக அதிகரித்தது. 2011ல் 3வது முறையாக பதவியேற்ற ஜெயலலிதா,
கடலுார், அரியலுார், பெரம்பலுார், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு
விரிவுபடுத்தினார்.
* விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்,
* விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்,
* விலையில்லா கறவை மாடுகள் வழங்கும்
திட்டம்,
* விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும்
திட்டம்,
* விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம்,
* விலையில்லா மடிக்கணினி வழங்கும்
திட்டம்,
* விலையில்லா 'சானிட்டரி நாப்கின்' வழங்கும் திட்டம்,
* மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா
சீருடைகள்,
புத்தகப்பைகள், காலணிகள், வண்ண பென்சில்கள், கணித
உபகரணங்கள், புவியியல் வரைபட புத்தகங்கள் வழங்கும் திட்டம்,
* பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்,
மகப்பேறு நிதியுதவி திட்டம், பசுமை வீடுகள் திட்டம்,
* அம்மா மகளிர் சிறப்பு முழு உடல்
பரிசோதனை, அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்
* அம்மா உப்பு
* அம்மா சிமென்ட்
* அம்மா மருந்தகம்
* அம்மா காய்கறி
உலக தமிழ் மாநாடு
உலகத் தமிழ் மாநாடு 1966ல் முதன்முறையாக நடந்தது. இதன் பின் ஏழு உலக தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் ஜெயலலிதா முதன்முறையாக
முதல்வராக பதவியேற்ற பின், 1995 ஜன., 1 முதல் ஜன., 5 வரை தஞ்சையில் நடத்தப்பட்டது. இதற்கு
முன் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் ஐந்தாவது மாநாடு மதுரையில் 1981ல் நடந்தது.
முல்லை பெரியாறு
முல்லை பெரியாறு அணையில் நீர்தேக்கும்
உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடி உயரமாக அதிகரித்து விவசாயிகளின் துயரத்தை போக்கினார். இதற்காக
நீண்டதொரு சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார். இதற்கு நன்றி செலுத்தும்
விதமாக 2014 ஆக., 22ல் மதுரையில் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர்.
காவிரி தாய்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு
ஆண்டுக்கு 205 டி.எம்.சி.,(1 டி.எம்.சி = 100 கோடி கன அடி) தண்ணீர் தரவேண்டும் என 1991ல் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை மத்திய அரசின்
அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா தொடர்ந்து போராடி வந்தார். இறுதியில் 2013 பிப்., 20ல் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.
இதன் மூலம் காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தினார்.
இந்தியாவுக்கு இந்திரா தமிழகத்திற்கு
ஜெ.,
15வது வயதில் திரை நட்சத்திரமாகத் தனது
வாழ்வைத் தொடங்கி ஒரு மாநிலத்தையே ஆளும் ஆளுமையாக நிமிர்ந்தவர் ஜெயலலிதா மட்டுமே.
பிரிட்டனுக்கு ஒரு மார்கரெட் தாட்சர்;இந்தியாவுக்கு
ஒரு இந்திரா; அதுபோல தமிழகத்துக்கு ஜெயலலிதா.
ஆணாதிக்கம் நிறைந்த உலகில் தனது தைரியத்தால் சாதித்தவர். ஆளுமைக் குணம் உயர்ந்து
நிற்கும் போது அது தனக்கென ஒரு பாதையில் பயணிக்கும் என்பது உலகம் கண்ட உண்மை.
சென்னையில் ஒருமுறை அ.தி.மு.க.
பொதுக்குழுக் கூட்டம் ஒன்றில் பேசிய ஜெயலலிதா “யாரையும் சார்ந்திருக்கக் கூடிய
வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமையவில்லை. எப்போதுமே நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், எனக்கு நானே தான் முடிவுகளை
எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் எதுவந்தாலும் நானே
தனித்து நின்று சந்தித்து கொண்டு, இப்படியே நான் செயல்பட்டு
கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.விமர்சனங்களை கண்டு பயப்படாமல் அதனை
வெற்றிப்படிகளாக்கியவர். ஜெயலலிதாவிடம் கருத்து வேறுபாடு உள்ளவர்கள்கூட அவரது
துணிச்சல், தளராத முயற்சி, தொடர் போராட்டக் குணம் ஆகிய மூன்றையும் மறுக்க மாட்டார்கள். இதுதான்
ஜெயலலிதாவின் வெற்றியின் ரகசியம்.
சட்டரீதியான வெற்றி
ஜெயலலிதா 1991 முதல் 96வரை தமிழக முதல்வராக இருந்தார். இந்த
காலகட்டத்தில் அவர் மீது பல்வேறு வழக்குகள் தி.மு.க., ஆட்சியில் தொடரப்பட்டது. வண்ண தொலைக்காட்சி வழக்கு, டான்சி நில வழக்கு, பிளசன்ட்டே ஓட்டல் வழக்கு, நிலக்கரி இறக்குமதி வழக்கு, டிட்கோ
- ஸ்பிக் நிறுவன பங்குகள் வழக்கு, ஐதராபாத் திராட்சை தோட்ட வழக்கு,
பிறந்தநாள் பரிசு வழக்கு, வருமானவரி கணக்கு வழக்கு, சொத்துக்குவிப்பு
வழக்கு போன்ற வழக்குகள் போடப்பட்டன. இவை அனைத்தையும்
சட்ட ரீதியாக அணுகி, குற்றமற்றவர் என வென்று காட்டினார்.
பிறப்பினால்
ஒரு பிராமணப் பெண்ணான ஜெயலலிதா, பிராமணர்களுக்கு
எதிர் இயக்கமாகத்
தோன்றிய திராவிட இயக்கத்தைக் கட்டிக்காக்கும் வலுவான தலைவர்களில் ஒருவராக இருந்தது ஒரு
வரலாற்று முரண். தேசியம் என்ற பெயரில் ஒற்றையாட்சியின் கீழ் படிப்படியாக
இந்தியாவைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராகவும் மதவாத அரசியல் தமிழகத்தில்
பரவ ஒருவகையில் சவாலாகவும் இருந்தவர் ஜெயலலிதா. தன்னுடைய ஆரம்ப
காலத்திலிருந்து கடைசிக் காலம் வரை மாநிலங்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல்
கொடுத்துவந்தவர். அந்த வகையில், இந்தியாவின் பன்மைத்துவத்துக்குத்
தொடர்ந்து பங்களித்து
வந்தவர். தொட்டில் குழந்தைகள்
திட்டம் முதல் அம்மா உணவகங்கள், மருந்தகங்கள்,
மாணவர்களுக்கான
மடிக்கணினிகள், ஏழைகளுக்கான
கால்நடைகள் திட்டம்
வரை பல திட்டங்கள் புரட்சிகரமானவை. இன்றைக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும்
இந்தத் திட்டங்கள் பிரதியெடுக்கப்படுவது அவருடைய அரசியலின் முக்கியத்துவத்தைச் சொல்லக் கூடியது.
தமிழகத்துக்கு
இது பேரிழப்பு. சவாலான இந்தக் காலகட்டத்தையும் நம் மாநிலம் கடந்து வரத்தான்
வேண்டும்!
Subscribe to:
Posts (Atom)