Thursday, October 29, 2015

கிழக்கும் மேற்கும்


ஒன்றைப் புரிந்து கொள். மனிதன் சட்டங்களை உருவாக்குகிறானா அல்லது சட்டங்கள் மனிதனை உருவாக்குகிறதா? மனிதன் பணத்தை உருவாக்குகிறானா, பணம் மனிதனை உருவாக்குகிறதா? மனிதன் பெயரையும் புகழையும் உருவாக்குகிறானா, பெயரும் புகழும் மனிதனை உருவாக்குகிறதா?

முதலில் மனிதனாகு. அப்போது பிற எல்லாம் தாமாகவே உன்னை தேடி வருவதைக் காண்பாய். தெரு நாயைப்போல் உறுமிக்கொண்டு சண்டையிடுவதை விட்டு விடு. நல்ல நோக்கம், நேரிய வழி, தர்ம வீரம், நல்ல வலிமை ஆகியவற்றைப் பெறு.  மனிதனாக பிறந்த நீ ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல். நீ இந்த உலகத்தில் பிறந்த போது உலகம் சிரித்தது, நீ அழுதாய். நீ உலகை விட்டுச் செல்லும் போது நீ சிரிக்க உலகம் உனக்காக அழத்தக்க நல்ல காரியங்களைச் செய். இதைச் சாதிக்க முடிந்தால் நீ மனிதன். இல்லையேல் நீ பிறந்தும் பயனில்லை. 

- வங்காளப் பத்திரிகையான உத்போதனுக்காக "கிழக்கும் மேற்கும் " என்ற தலைப்பில் சுவாமி விவேகானந்தர் எழுதிய   கட்டுரையில் ஒரு பகுதி.....

zakath


 
நபிகள் அவர்கள் இசுலாத்திற்கு விதித்த மூன்றாவது கடமை zakath(தானம் வழங்கல்)!. தன்னுடைய வருவாயில் குறைந்தது நாற்பதில் ஒரு பங்கை அல்லது 2.5 விழிக்காட்டைத் தானமாக இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதைக் குரான் கடமையாக்குகிறது! எல்லாருக்கும் இயலக்கூடிய குறைவான பங்கு இது! வரி எவ்வாறு தவிர்க்க இயலாததோ, அதே போல் இதுவும் தவிர்க்க இயலாதது....

ஒருவன் நபிகள் பெருமானாரிடம் சொல்கிறான்: "நான் இசுலாத்தில் நம்பிக்கை உள்ளவன்; ஒரே கடவுளான அல்லாவையும், இறைத்தூதரான முகம்மதுவையும் ஏற்றிருப்பவன்; மேலும் ஐந்து நேரம் தொழுபவன்!"

பெருமானார் கேட்கிறார்: zakath கொடுக்கிறாயா?

அவன் சொல்கிறான்: " அதனாலென்ன? நான் எந்தத் தப்பும் செய்ததில்லையே!"

பெருமானார் சொல்கிறார்: "எந்த பயனும்மில்லை!"

இறைவனின் இயல்புகளைச் சொல்லி அவனுக்குப் புகழ் மாலைகளைச் சூட்டி அவனை நமக்கு அறிமுகப்படுத்துவதில் திருக்குரான் நிகரில்லாச் சிறப்புடையது! இறைவனின் ஒரு தன்மை, 'Master of the Day of Recompense' என்பது! அவன் தீர்ப்பு நாளுக்கு அதிபதி! தீர்ப்பு நாள் என்பது உயிர்கள் உடல்களை நீத்து விட்ட பிறகு, ஒரு நாளில் இறைவனால் எழுப்பப்பட்டு அவற்றின் வரவு செலவுகள் விசாரிக்கப்படும் நாள்! நல்லதுக்கு நல்லதையும், கெட்டதுக்கும் கெட்டதையும் வெகுமதியாகவும் தண்டனையாகவும் வழங்கும் நாள் அது!...

இந்தியச் சமயங்கள் செய்த வினைகளுக்கேற்றவாறு மறுபிறப்பு என்று வலியுறுத்துவது போல், மேற்காசியச் சமயங்களான கிறித்துவம், இசுலாம், யுதம் ஆகியவை தீர்ப்பு நாளை வலியுறுத்துகின்றன! தீர்ப்பு நாளில் ஒருவன் செய்த நல்ல, தீய செயல்களுக்கு ஏற்றவாறு வெகுமதியோ, தண்டனையோ இருக்கும் என்பது புரிந்துகொள்ளத் தக்கது தான்!

ஆனால் இதற்கும் ஒரு படி மேலே செல்கிறது குரான்! செய்யும் வசதி இருந்தும் செய்யத் தவறிய செயல்களுக்கும் தண்டனை உண்டு என்னும் குரானின் எச்சரிக்கை தனித்தன்மை வாய்ந்தது என்பது மட்டுமில்லை; அழகியவற்றுளெல்லாம் அழகியது!

உங்களுக்குத் தீர்ப்பு வழக்கப்படப்போவது நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அடிப்படையில் அல்ல! இவ்வளவு சொத்து வைத்திருந்தும், உங்கள் பக்கத்தில் அனாதைகள் இருப்பதை அறிந்திருந்தும், ஏன் அவர்களுக்கு உதவவில்லை என்னும் கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்' என்கிறார் நபிகள் நாயகம்!

செய்த தீவினைக்குத் தண்டனை உண்டு என்று அறிந்திருக்கிறோம்! செய்யத் தவறிய கடமைக்கும் தண்டனை உண்டு என்பது சிந்தனைப் புதுமை! ஒரு வறியவனிடம், வயிற்றுக்கு இல்லாதவனிடம் ஒரு செல்வன் பாராமுகமாக நடந்து கொள்வதைத் தீர்ப்பு நாளை சுட்டிக் காட்டித் திருக்குரான் அச்சுறுத்துவது அழகியவற்றுளெல்லாம் அழகியது!

இசுலாம் என்பது 'இறைவனிடம் முழு ஒப்படைப்பு' என்கிறார்கள்; இசுலாம் என்பதே ' ஏழைகளின் பசியாற்றல் தானோ' என்று எண்ணத் தோன்றுகிறது!

- துக்ளக், 01-09-10.