சமுகத்தை முன்னேற்றப் பெரியார் நம்பியது இட ஒதுக்கிட்டுக் கொள்கையை! அது நீதிக் கட்சியின் கொள்கை. அந்தக் கொள்கையில் அவர் கொண்ட மையலின் காரணமாக, அவர் காந்தியையும், விடுதலைப் போராட்டத்தையும் கூடக் கை விட்டார்! அந்த கொள்கை கல்வி மற்றும் அரசு அலுவல் வாய்ப்புகளைக் கீழ்நோக்கிப் பரவச் செய்தது என்பது உண்மை தான். ஆனால், கடந்த 90 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு சாதியிலும் உச்ச அளவாக பத்துப் பதினைந்து விழிக்காடு மக்களே முன்னேற்றமடைந்தனர். ஒவ்வொரு சாதியிலும் உள்ள பெருவாரியான மக்களின் வழியை அந்தந்தச் சாதிகளில் ஏற்கனவே இந்தக் கொள்கையால் முன்னேற்றம் அடைந்து விட்ட பத்துப் பதினைந்து விழிக்காட்டினரே அடைத்துக் கொண்டு நிற்கின்றனர். சாதிவாரிப் புள்ளி விவரம் கோருகிற சாதிக் கட்சிகள், ஒவ்வொரு சாதியிலும் தொடர்ந்து முன்னேறுவோரின் புள்ளி விவரத்தையும், முன்னேறவே முடியாதவர்களின் புள்ளி விவரங்களையும் கோருவதில்லையே ஏன்..?
மருத்துவர் மகன் மருத்துவனாகிறான்; பொறியாளர் மகன் பொறியாளராகிறான்; நிதிபதி மகன் நிதிபதியாகிறான். அதே சாதியைச் சேர்ந்த பனை ஏறுகிறவன் மகன் இன்னும் பனை ஏறிக்கொண்டு தானே இருக்கிறான்! அவன் எப்போது மாவட்ட ஆட்சியர் ஆவான்? அவனை மறித்துக் கொண்டு நிற்பவன் யார்? அவன் சாதியிலுள்ள வசதி மிக்கவன் தானே!
1920-ல் பிற்பட்டவனின் இடத்தைப் பார்ப்பனன் அடைத்துக் கொண்டிருந்தான்! இப்போது அடைத்துக் கொண்டிருப்பது யார்..? ஒரு சாதியின் பெயரால் இட ஒதுக்கீடு பெற்று மருத்துவனாகப் பெற்றவன் பொதுப்பட்டியலுக்குப் போனால்தானே, அதே சாதியை சேர்ந்த இன்னொருவன் அந்த இடத்திற்கு வர முடியும்..
பழைய காலத்தில் இருந்த சாதியமைப்புக்களில் ஒவ்வொரு சாதியும் தன்னை மேல் நிலைக்குத் தூக்கிக் கொள்ளப் போராடியது! இப்போது ஒவ்வொரு சாதியும் தன்னைக் கீழ்நிலைக்கு இறக்கிக்கொள்ளப் போராடுகின்றது! பிற்பட்டவன் மிகவும் பிற்பட்டவனாக விரும்புகிறான்; மிகவும் பிற்பட்டவனோ தாழ்த்தப்பட்ட சாதியினரோடு சேர்த்து அறிவிக்கக் கோருகிறான்! முன்பு சமூக மதிப்பைப் பெறத் தன்னுடைய சாதியை உயர்த்திக் கொள்ள நினைத்தார்கள்! இப்போது அரசு சலுகை பெறத் தாழ்த்திக் கொள்ள நினைக்கிறார்கள்!
இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒரு வழியில் நல்ல கொள்கை தான்! ஆனால் வாய்ப்புப் பெற்று ஏற்றம் பெற்றவன் ஒவ்வொருவனும் தொடர்ந்து அடுத்தடுத்துத் தன்னுடயை மகனையும், பிறகு பேரனையும் வரிசையில் முன்னிறுத்தி, வரிசையை விட்டு அகலாமல் அடைகாத்துக் கொண்டிருக்கிறானே! வரிசையின் பின்னால் இருப்பவன் எப்போது முன்னால் வர முடியும்? அடைந்தவனே பயனை அடைந்து கொண்டிருந்தால், அடையாதவன் அடைவது எப்போது?
இட ஒதுக்கீட்டுக் கொள்கையும், சாதி ஒழிப்புக் கொள்கையும் ஒரே நுகத்தடியின் இணைக்காளைகளாக இருக்க முடியாது! கடந்த 90 ஆண்டுகளாக அந்தக்கொள்கையை நடைமுறைப்படுத்தி, பத்து இருபது விழிக்காட்டினர் தான் நன்மை பெற்றிருக்கின்றனர்.
தொண்ணூறு ஆண்டுகள் என்பது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு தானே! 1919-ல் லெனின் நடைமுறைப்படுத்திய வர்க்க பேதமற்ற கொள்கை, உலகில் பாதியைச் சிவப்பாக்கி, ஒரு குறிப்பட்ட காலத்திற்குள் இற்றுப் போயிருந்த சார் மன்னினின் ருசியாவை அமெரிக்காவுக்கு நிகிரான வல்லரசாக்கிவிட்டு, 70 ஆண்டுகளில் முடிந்தும் போய்விட்டதே!
இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்றமிகு கொள்கை என்றால் இந்த தொண்ணூறு ஆண்டுகளில் தொண்ணூறு விழிக்காட்டினரை முன்னேற்றி இருக்க வேண்டாமா? இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த இருபது விழிக்காட்டினர், தாங்கள் அடைத்துக் கொண்டிருக்கிற வழியைத் தம்தம் சாதியினருக்குத் திறந்து விட போவதில்லை! இதை எந்த சாதியில் உள்ள ஏழையும் அறிவதில்லை என்பது தான் சோகம்.
- (
துக்ளக் 9-12-09, 16-12-2009) பதிப்புகளில்
"இவர்கள் சாதியை ஒழிக்கிறார்களாம்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரை..... மற்றும்
திரு பழ. கருப்பையா அவர்கள் எழுதிய கருணாநிதி என்ன கடவுளா என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது