Sunday, July 31, 2016

கிருஷ்ணா புஸ்கரம்






இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.

கிருஷ்ணா நதியும் கிருஷ்ணா புஸ்கரமும்

கிருஷ்ணா நதியே இந்தியாவின் நான்காவது பெரிய நதியாகும்! இந்த நதி கிருஷ்ணவேணி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடங்கி மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் வழியாக சுமார் 1300கி.மீ. பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கிருஷ்ணாவின் பிறப்பிடம்

மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகிய மஹாபலேஷ்வர் மலைப்பகுதியில், பழமையான மகாதேவர் கோயில் உள்ளது. இங்குள்ள புனிதமான பசுவின் முகத்திலிருந்து கிருஷ்ணா, கோய்னா, வென்னா, சாவித்ரி, காயத்ரி என்ற ஐந்து ஆறுகளும் உற்பத்தி ஆகின்றன. எனவே இங்குள்ள தேவிக்கு பஞ்சகங்கா தேவி என்ற பெயர்! சுமார் 1300மீ உயரத்தில் கிருஷ்ணா நதி தோன்றுகிறது. இந்த இடம் அரபிக்கடல் பகுதியிலிருந்து சுமார் 64கி.மீ. தூரத்தில் உள்ளது.

பஞ்ச கங்கா என அழைக்கப்படும் இவ்வைந்து நதிகளில் "சாவித்ரி நதி' மட்டும் மலையின் மேற்குச் சரிவு வழியாக 100கி.மீ தூரம் ஓடி அரபிக் கடலில் கலந்து விடுகிறது. "காயத்ரி நதி' மெல்லிய நீரோட்டத்துடன் மஹாபலேஷ்வரிலேயே கிருஷ்ணாவுடன் சேர்ந்து விடுகிறது. வென்னா நதி கிழக்கு நோக்கி 130கி.மீ. தூரம் பயணம் செய்து சதாரா மாவட்டத்தில் "சங்கம் மஹூலி' என்ற இடத்தில் கிருஷ்ணாவுடன் சேர்கிறது. "கோய்னா நதி' சுமார் 130கி.மீ. தூரம் ஓடி "காரட்' என்ற இடத்தில் கிருஷ்ணாவுடன் இணைகிறது. "பிரீத்தி சங்கமம்' என்றும் இந்த இடம் வழங்கப்படுகிறது.

கிருஷ்ணா செல்லும் பாதை

மலையிலிருந்து கீழிறங்கும் கிருஷ்ணா, மஹாராஷ்டிராவின், வாய், சாங்லி நகர்களை கடந்து, கர்நாடகாவின் எல்லைக்குள் நுழைகிறது. அங்கு கிழக்கு நோக்கித் திரும்பி, வளைந்து, வளைந்து சென்று கர்நாடகாவைக் கடந்து ஆந்திராவை அடைகிறது. இங்கு முதலில் தென்கிழக்காகச் சென்று பின் வடகிழக்காக திரும்பி விஜயவாடா நகரிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலையினைக் கடந்து வங்காள விரிகுடாவில் ஹம்சலாதீவி என்னும் இடத்தில் சங்கமமாகிறது.

துணையாறுகள்

இந்நதியின் வலது கரைப் பக்கங்களில்(தென்பகுதி) வென்னா, கோய்னா, வாஸ்னா, பஞ்சகங்கா, தூத்கங்கா, கடப்பிரபா, மலப்பிரபா மற்றும் துங்கபத்திரா நதிகள் இணைகிறது. இந்நதியின் இடப்பக்கங்களில்(வடபகுதி) பீமா, திண்டி, பெட்டவாகு, ஹலியா, முசி, ஏர்லா, முன்னேரு, பலேரு ஆகிய துணை நதிகள் சேர்கின்றன.

பீமா ஆறு


இவைகளில் "பீமா' நதி தான் கிருஷ்ணாவின் துணையாறுகளில் மிகப் பெரியது. 861கி.மீ நீளமுள்ளது. மஹாராஷ்ட்ராவின் "பீம்சங்கர்' மலையில் தோன்றி கர்நாடகா வழியாக ஆந்திராவிற்குள் வந்து கிருஷ்ணாவுடன் இணைகிறது.

முசி ஆறு

ஹைதராபாத் நகரத்திற்கு நடுவில் இரண்டாகப் பிரிந்து செல்வது இந்நதிதான். "அனந்தகிரி' மலையில் தோன்றி 240கி.மீ தூரம் சென்று கிருஷ்ணாவுடன் சேர்கிறது.

துங்கபத்ரா ஆறு

கிருஷ்ணா நதியின் முக்கியமான துணை ஆறு! "துங்கா'...,"பத்ரா' என்ற இரண்டு துணை ஆறுகளாக தோன்றி பின் இணைந்து துங்கபத்ரா நதியாக கிருஷ்ணாவுடன் இணைகிறது. "துங்கா' நதி "வராக பர்வதம்' மலையில் தோன்றி 147கி.மீ. தூரம் ஓடி "கூடலி' என்னும் இடத்தில் "பத்ரா' நதியுடன் இணைகிறது. கூடலியிலிருந்து துங்கபத்ரா நதியாக 513கி.மீ. தூரம் ஓடி ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தின் சங்கமேஸ்வரத்தில் கிருஷ்ணாவுடன் இணைகிறது. இப்பகுதியில் "பாவநாசி' என்ற ஆறும் சேர்கிறது. பாசன வசதிகள் பெறும் நிலப்பகுதிகள் ஏராளம்! இந்நதி பாயும் காட்டுப்பகுதியின் கரைப்பகுதிகளில் மிகவும் அழகான சாம்பல் நிற, மற்றும் இளஞ்சிவப்பு நிறப் பாறைகள் நிறைய உள்ளன. இவை இந்நதியின் சிறப்பம்சம்!

விஜய நகரப் பேரரசின் பெருமைக்கு அடையாளமாய் விளங்கும்..., இன்றும் கம்பீரத்துடன் தோன்றும் "ஹம்பி' இந்நதிக்கரையில்தான் உள்ளது.

பஞ்சகங்கா ஆறு!


இதற்கும் மேற்கூறிய "பஞ்ச கங்கா' ஆறுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

"பஞ்சகங்கா' ஆறு என்பதே ஒரு தனி ஆறு! மஹாராஷ்ட்ராவில் கோலாப்பூர் மாவட்டத்தில் "ப்ரயாக் சங்கமம்' என்ற இடத்தில் பஞ்சகங்கா தோன்றி 80கி.மீ. தூரம் பயணித்து கிருஷ்ணாவுடன் கலக்கிறது. இந்த பிரயாக சங்கமம் (அலகாபாத் அருகில் உள்ள)திரிவேணி சங்கமத்தைப் போன்று மிகவும் புனிதமாகப் போற்றப்படுகிறது. இங்கு நிலத்திற்கு மேலே துளசி, காசரி, கும்பி, போகவதி, நதிகளும், மற்றும் பூமிக்குள் மறைந்து செல்லும் சரஸ்வதி நதியும் ஒன்று சேர்கிறது.

இந்நதி தன் பாதையில் சிறிது தூரத்திற்கு சமவெளி பகுதியிலிருந்து 40 அடி ஆழத்தில் செல்கிறது. மலை சார்ந்த இப்பகுதி முழுவதும் மிகவும் பசுமையாக இயற்கை வரைந்த அழகு ஓவியமாகத் திகழ்கிறது.

கிருஷ்ணா புஸ்கரம்

 
கிருஷ்ணா நதி , இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்திரா, பிரம்மபுத்ரா,பிரணீதா) ஒன்றாகும். . இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாட படுகிறது. அதாவது குரு பகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் அந்த பனிரெண்டு நாட்கள் கிருஷ்ணா புஸ்கரம் கொண்டாடப்படுகிறது. இது வரும் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த காலங்களில் குரு பகவான் கிருஷ்ணா ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்தில் கிருஷ்ணா புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள் வருமாறு:–

விஜயவாடாவில் புஸ்கரம் நடைபெறும் படித்துறைகள் : துர்கா படித்துறை(Durga Ghat), புஸ்கர படித்துறை (Pushkara Ghat),இத்தாநகரம்(ithanagaram Ghat), பத்மாவதி படித்துறை, மேட்ல பஜார் (Metla Bazar), புன்னமி படித்துறை ( Punnami Ghat), சிவ க்ஷேத்ரம் (Siva Kshetram).


கர்னூலில் உள்ள படித்துறைகள் : பாதாள கங்கா(ஸ்ரீசைலம்) சங்கமேஸ்வரம் 


மெஹபூப் நகரில் உள்ள படித்துறைகள் : ஜுராளா, பீச்சுப்பல்லி.
கர்நாடகாவில் உள்ள படித்துறைகள் : சிக்கொடி(பாகல்கோட்), ராய்ச்சூர்.

நதியை நன்றியுடன் வணங்குவோம்! பாதுகாப்போம்!

ஷாந்தி மந்திரம்

நம்முடைய நன்மைக்காக இறைவனிடம் முறையிடும் நாம், நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற இந்த பிரபஞ்சத்தின் நன்மையையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் அல்லவா? அதற்கேற்றாற்போல் இருக்கிறது இந்த ஸ்லோகம். உலகத்தில் நன்மை, அமைதி, முழுமை, வளம் உண்டாகின், நமக்கு வேறென்ன வேண்டும்? இயற்கை நம்மை சுகமாக வாழவைப்பது எவ்வளவு உண்மையோ, அதே உண்மையை நாமும் இயற்கையிடம் காண்பிக்க வேண்டும் தானே? சர்வமும் வளம்பெற இந்த ஸ்லோகத்தை தினமும் கூறுவோம்!

ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது
ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது
ஓம் சர்வேஷாம் மங்களம் பவது

எங்கும் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் அமைதி உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் முழுமை உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் வளம் உண்டாகட்டும்
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

சர்வே பவந்து சுக்கின
சர்வே சந்து நிராமயா,
சர்வே பத்ராணி பச்யந்து,
மா கச்சித் துக்க பாக் பவேத்.

எல்லா மக்களும் சுகமாக இருக்கட்டும்,
எல்லா மக்களும் வியாதி இல்லாமல் இருக்கட்டும்,
எல்லா மக்களும் பத்திரமாக உணரட்டும்
எவருமே, எங்குமே துக்கம் இல்லாமல் இருக்கட்டும்
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

பிரவினின் உளறல்கள்


Inspirational Quote


சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்


சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்