Wednesday, October 18, 2017

I support Tamil Chair in Harvard University

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் கேம்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன்,திருமதி வைதேகி ஹெர்பெர்ட், பால் பாண்டியன், எழுத்தாளர் அப்பாதுரை முத்துலிங்கம், முனைவர் சொர்ணம் சங்கர், குமார் குமரப்பன், மற்றும் முனைவர் ஆறுமுகம் ஆகியோர் இதற்கான  முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

 ஹார்வர்டு எனும் உலகத்தரம்

ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முன்னோடி பல்கலைக்கழகம் ஹார்வர்டு. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு இல்லாத துறைகளே இல்லை; மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதும் இல்லை என்று கூறத்தக்க அளவில், ஆராய்ச்சிகளுக்குக் கிள்ளிக்கொடுக்காமல், மில்லியன்களில் டாலர்களை அள்ளிக்கொடுக்கிறது ஹார்வர்டு.

இங்கே மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை, ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிடும் போது அவற்றை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்வது கடந்தகால, நிகழ்கால வரலாறாகும். இப்பல்கலையின் முன்னாள் மாணவர்கள், இங்கே பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோரில் 48 பேர், கடந்த நூறாண்டுகளில் உலகின் உயரிய நோபல் விருதைப் பெற்றிருக்கிறார்கள். மேலும் 38 பேர் புலிட்சர் விருதுகளைப் பெற்றவர்கள். ஹார்வர்டின் தனிச்சிறப்பாக அனைவரும் கூறுவது ‘வேற்றுமையில் ஒற்றுமை’. அப்படிப்பட்ட ஹார்வர்டில் தான் தமிழுக்கு முதல்முறையாக இருக்கை அமைய இருக்கிறது.

தமிழுக்கு ஏன் இருக்கை?

உலகின் 20 பழமையான மொழிகளுள் “தமிழ் மொழியும் ஒன்று....  எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவு கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் தமிழில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும்.

நமது பண்டைத் தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். அப்போது தான் பிற பண்பாட்டினருடன் ஆய்வு முடிவுகளைப் நாம் பகிர்ந்துகொள்ள முடியும். இது தமிழின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் போதாமைகள் சீர்செய்யப்படலாம். இந்த அடிப்படை யில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவுள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைத் தமிழர்களாகிய நாம் முதலில் புரிந்துகொள்ள முடியும்.

தற்போதைய நிலையில் , ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தெற்காசியவியல் பிரிவின் கீழ் இப்போதும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தொடக்கத் தமிழ், இடைநிலைத் தமிழ், உயர்நிலைத் தமிழ் என மூன்று நிலைகளில் தமிழ்ப் பாடநெறிகள் உள்ளன. ஜொனதன் ரிப்ளே என்பவர் சுமார் 20 மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்து வருகிறார். ஆனாலும், இங்கே தமிழுக்கெனத் தனியான ஒரு பேராசிரியரின் கீழ் இயங்கும் கல்விசார் இருக்கை கிடையாது. இதனால், ஹார்வார்டில் தமிழாய்வு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய இருக்கை உருவாக்கப்படும்போது, தெற்காசியவியல் பிரிவின் கீழ் தமிழுக்கெனத் தனியான பிரிவு ஒன்றை உருவாக்கவும், அதற்கெனப் பேராசிரியர் ஒருவரை நியமிக்கவும் முடியும். இதன்மூலம், ஹார்வார்டில் தமிழ்க் கல்வியையும், தமிழ் ஆய்வையும் புதிய மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

தமிழ் இருக்கையை அமைப்பது எப்படி?

உலக மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட தமிழுக்கு ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்க என்ன வழிமுறை உள்ளது என்ற கேள்வி எழலாம். தகுதிமிக்க ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம் அவரது தலைமையின் கீழ் தமிழ் இருக்கையை அமைக்கும். தேர்ச்சியும் திறமையும் கொண்ட ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தி உலக சமுதாயத்துக்குச் தமிழைக் கற்றுக்கொடுக்கும்.

தமிழையும் அதன் இலக்கிய இலக்கணப் பரப்பையும் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். தமிழ் மொழியைப் பேசும் மக்களாகிய தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல், வரலாறு, தொல்லியல் ஆகிய தளங்களிலும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும். ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு அவை சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். ‘உலகுக்கே பொதுவான ஒரு தமிழ் இருக்கை’ மூலம்தான் இந்தப் பணிகளை உலகறிச்செய்ய முடியும். அதற்கான ஒன்றாகவே ஹார்வர்டு தமிழ் இருக்கை அமையவிருக்கிறது”

எவ்வளவு தேவை?


தமிழுக்கான இந்த இருக்கை, 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.40 கோடி) நன்கொடை மூலம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் தொகையில் இருந்து ஜானகிராமனும், திருஞான சம்பந்தமும் தனித்தனியே 500,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மீதமுள்ள தொகையை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் திரட்ட முயற்சிகள் தற்போது மேற் கொள்ளப்பட்டுள்ளன.இதற்காக ‘தமிழ் இருக்கை இங்க்’ (Tamil Chair Inc)  என்ற லாப நோக்கற்ற நிறுவனம் ஒன்று உருவாக் கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அரியணையில் நம் அன்னைத் தமிழை அமரவைக்க நம்மால் இயன்ற வரை  நாம்  நன்கொடைகளை அளிக்கலாம்., நன்கொடைகளை நேரடியாகச் செலுத்த  >http://harvardtamilchair.org/donate  என்ற இணையதளத்துக்குச் செல்லுங்கள். யார் எவ்வளவு நிதியளித்தார்கள் என்ற விபரம் தமிழ் இருக்கைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தமிழ் இருக்கை அமைய நன்கொடை அளிப்போருக்கு நேரடியாகப் பாராட்டுச் சான்றிதழை அவர்களது வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கிறது ஹார்வர்டு பல்கலைக் கழக நிர்வாகம்.

                                                                          -இவன்
                                                      முனைவர் பூ.வெ. பிரவின் சுந்தர்

Source
1) http://harvardtamilchair.org
2) தமிழ் ஹிந்து
3) விகடன்.காம்

No comments:

Post a Comment