Monday, October 18, 2010

Never Forget Helping Hands

ஒரு நீச்சல் தெரியாத சிறுவன் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்தான். உயிர்பிழைத்தல் பொருட்டு "காப்பாத்துங்க. காப்பாத்துங்க.." கத்தினான். ஒரு மனிதாபிமானம் நிறைந்த இதைப்படிக்கும் உங்களைப்போன்ற ஒருத்தர் அந்த ஆற்றில் குதித்து நீரின்பிடியில் இருந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.

(அந்த ஒருத்தர் ஆணா பெண்ணா என்பது முக்கியமில்லை).

அந்தச்சிறுவனும் தனது உயிரைக்காப்பாற்றியவரிடம் "என்னைக் காப்பாத்துனதுக்கு நன்றிகள்", என்றான். அவர் கேட்டார், "எதற்காகப்பா நன்றி சொல்கிறாய்".சிறுவன் - "என்னைக்காப்பாற்றியதற்காகத்தான்".

அவர் இப்பையனின் கண்பார்வையை ஊடுருவிக்கொண்டே மறுமொழிந்தார் " பையா. நான் உன்னைக் காப்பாற்றினேன் என்பதெல்லாம் இருக்கட்டும். நீ பெரியவனானதும் - உனது வாழ்க்கையை நல்லவிதமாக வாழ்ந்துகாட்டுவதில் மட்டுமே நீ எனக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். நீ நல்லவிதமான ஒரு சிறந்தகுடிமகனாக வாழ்ந்தால் மட்டுமே - நாலு பேருக்கு உதவி செய்து - ஊரில் நாட்டில் நல்லபெயர் எடுத்து நிரூபிப்பதில்தான் உனது உயிரைக் காப்பாற்றியதின் நன்றியை எனக்குத் தெரிவிக்கவேண்டும்."

"நான் உன்னை நினைத்து வருந்தும் அளவுக்கு நடந்துகொள்ளச் செய்து விடாதே. ஒரு மோசமானவனைக் காப்பாற்றிவிட்டோமே என்று நான் வருந்தும் நிலைக்கு என்னை ஆளாக்காமல் ஒரு சிறந்தவனைக் காப்பாற்றினோம் என்ற கவுரவத்தை - ஒரு தர்மவானைக் காப்பாற்றினோம் என்ற கர்வத்தை எனக்குக் கொடு" என்றார்.

நீதி : நன்றி மறப்பது நல்லதில்லை 

Thursday, October 7, 2010

Current Mentality of Human Beings

நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது...?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே வாளி 'விர்'ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு
நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. 'எப்படி வெளியேறுவது' என்று யோசிக்கத் தொடங்கியது.

'மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?'

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்து கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அங்கு நரி இருப்பதைக் கண்டது.

"அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்டது.

"நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்" என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

"நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்". என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச்
சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்................!

Moral: மனிதர்களுக்கும் இதே நிலைமை தான்!

Monday, October 4, 2010

Dont Interface for Unknown Issues


ஒருநாள் குரங்கு ஒன்று ஆற்றங்கரைப் பக்கம் வந்தது. அப்போது ஆற்றிலே சில செம்படவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அந்தக் காட்சியை ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு குரங்கு ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. செம்படவர்கள் வலை வீசுவது மிகவும் எளி தான செயல் என்று குரங்கிற்குத் தோன்றியது.

ஒவ்வொரு தடவையும் செம்படவர்களுக்கு வலையில் ஏராளமான மீன்கள் கிடைத்தன. இதே மாதிரி தினமும் வீசினால் ஏராளமான மீன்கள் கிடைக்கும் போல் இருக்கிறதே. மீன் பிடித்தே தினமும் வயிறு நிறைய சாப்பிடலாம்போல் இருக்கிறதே என்று குரங்கு எண்ணிக் கொண்டது. நண்பகல் நேரம் வந்ததும் செம்படவர்கள் வலைகளைக் கரையில் வைத்துவிட்டுச் சாப்பிடுவதற்காகச் சென்றனர். குரங்கு மரத்தை விட்டு மடமடவெனக் கீழே இறங்கிற்று. செம்படவர்கள் வைத்துவிட்டுப் போயிருந்த வலை ஒன்றை எடுத்து செம்படவர்கள் போலவே ஆற்றில் வீசி எறிந்தது. குரங்கைவிட வலை கனம் மிகுந்திருந்ததால் அது குரங்கையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஆற்றில் போய் விழுந்தது.

வலைக்கு அடியில் குரங்கு சிக்கிக் கொண்டதால் அது தண்ணீரிலிருந்து மீண்டும் கரையை அடைய முடியாமல் தத்தளித்தது. இன்னும் சற்று நேரம் கழித்து இருந்தால் குரங்கு நீரில் அமிழ்ந்து இறந்து போயிருக்கும். நல்லவேளையாக செம்படவர்கள் அங்கு வந்துவிட்டனர். ஆற்று நீரில் குரங்கு தத்தளிப்பதைக் கண்டதும், நீரில் பாய்ந்து நீந்திச் சென்று வலையிலிருந்து குரங்கை விடுவித்துக் கொண்டு கரை சேர்ந்தனர். உயிர் பிழைத்த குரங்கு மகிழ்ச்சியோடு அந்த இடத்தை விட்டு ஓடியது.

Moral: நமக்குத் தெரியாத விஷயங்களில் எல்லாம் இதுக்குதான் தலையிடக்கூடாது என்பது.

Sunday, October 3, 2010

Dont Hate Any One ,

‘பாட்டி உனக்கு தான் வயசாகிப்போச்சே, இந்த வயசுல உனக்கு என்ன இனிப்புல இவ்வளவு ஆசை. என்னை தொந்தரவு செய்யாம சீக்கிரம் செத்து தொலையேன். ஒரு சனியன் ஒழிஞ்சதா நினைச்சு நிம்மதியா இருப்பேன்’, அக்கினி பிளம்புகளாக துவேசம் கலந்து வார்த்தைகளை அள்ளி வீசிய நீலாவுக்கு பதினெட்டு வயது. கல்லூரியில் முதலாமாண்டு தன் மாமா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருநதாள்.

‘நீ என்னை மட்டுமா வளர்த்த, புனிதாவையும் சேர்த்து தானே வளர்த்த. அப்புறமேன் என்கிட்ட மட்டும் அத கொண்டா, இதக் கொண்டாண்ணு நச்சரிக்கிற…’

கட்டிலில் படுத்திருந்த பாட்டிக்கு நீலாவின் பேச்சு தேள் கொட்டியது போல் இதயத்தில் வலித்த்து. ‘இந்த வார்த்தையை முடியாத காலத்தில் கேட்பதற்காகவா உங்களையெல்லாம் பொத்திப் பொத்தி வளர்த்தேன்’, பாட்டி மனதிற்குள் புழுங்கினாள்.

பாட்டி எதையோ சொல்ல வாயெடுக்க அதைக்கேட்காமலேயே நீலா அடுத்த அறைக்குள் புகுந்து கதவை ‘பட்’ டென்று சாத்தினாள்.

நீலாவின் வார்த்தைகள் பாட்டியின் தலைக்குள் மேகக் கூட்டமாய் சூழந்து வட்டமிட்டு பாரமேற்ற பழைய நினைவுகள் அமில மழைத்துளியாய் மனதில் விழத்தொடங்கின.

நீலா, பாட்டியின் மகள் வயிற்று பேத்தி. புனிதா, மகன் வயிற்று பேத்தி. மகன் வீட்டிலேயே பாட்டியும் நீலாவும் இருந்தனர். புனிதாவிற்கும் நீலாவிற்கும் வயது அப்போது பன்னிரெண்டு இருக்கும். நீலாதான் மூத்தவள். இருவரும் ஓரிரு மாத இடைவெளியில் பிறந்தவர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் தான் படித்துவந்தனர்.

புனிதாவின் அம்மா சுகவீனமுற்று மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாகிவிட, வீட்டுப் பொறுப்பு முழுவதுமாக பாட்டியிடம் வந்தது.

அது ஒரு புதன்கிழமை. பாட்டி கறிச்சோறு ஆக்கி இருந்தாள்.

பாட்டியின் கைப்பக்குவம் மிக அருமையாக இருக்கும். அதுவும் முந்திரி அண்டிப் பருப்பு போட்டு பாட்டி சமைக்கும் கௌதாரி கறிக்குழம்பிற்கு தனிச்சுவையே உண்டு.

பள்ளிவிட்டு வந்த புனிதாவிற்கு பாட்டியின் கறிக்குழம்பு நாக்கில் எச்சிலை ஊறவைத்தது.ஆனால் பாட்டி நீலாவிற்கு கறிச்சோறும் தனக்கு பழைய சோழக் காடியும் மாங்காய் தொக்கும் தட்டில் கொண்டு வைத்தபோது புனிதாவிற்கு எல்லாமே சூனியமாக தெரிந்தது.மனம் பொறுக்காது புனிதா, ‘பாட்டி எனக்கும் கறிச்சோறு தாயேன்’ என்றாள்.

‘உன்னை பெத்த மவராசி சாவக்கிடக்கா, உன் நாக்கு கறிச்சோறு கேட்குதாக்கும். இன்னும் ரெண்டு நாளுல அவபோயிருவா, அதுக்கு பின்னாடி உனக்கு இந்த காடி கூட கெடைக்காது. இப்பவே நல்லா கொட்டிக்க’, பாட்டியின் நாவிலிருந்து முள்ளாய் வார்த்தைகள் வந்து சின்னப்பெண் புனிதாவைத் தைத்தது.

பாவம் புனிதா, தன் தகப்பனின் உழைப்பில் வந்த பலனை அனுபவிக்க முடியவில்லை. அது புரியும் வயதும் அவளுக்கில்லை. வாய்விட்டு அழுவதற்குக்கூட தைரியமின்றி வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே மனதிற்குள்ளேயே அம்மாவை நினைத்துக்கொண்டாள், ‘அம்மா இப்போது பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எலும்பில்லாத கறியாக எடுத்துத் தருவாளே’, புனிதாவின் மனம் ஏங்கியது.

புனிதாவின் வடியும் கண்ணீரைப்பார்த்த பாட்டி,’அழுதழுது வீட்ட உருப்படாம ஆக்கிடாத’, வெடித்தாள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு பாட்டி பழைய நினைவிலிருந்து கலைந்தாள்.

கதவருகே புனிதா ஏதோப் பொட்டலத்துடன் நின்றிருந்தாள்.

பாட்டியின் அருகில் ஆதரவாய் வந்து, ‘பாட்டி, நீலா சொன்னதெல்லாம் நானும் கேட்டேன். கவலைப்படாதே. நான் இனிப்பு கொண்டாந்திருக்கேன். ஊட்டிவிடவா’ கேட்டுக் கொண்டே ஒரு விள்ளல் எடுத்து பாட்டியின் வாயில் ஊட்டினாள்.

பொட்டலத்தையும் பாட்டியிடம் நீட்டி, ‘இந்தா பாட்டி, இது உனக்கு தான். அம்மா செலவுக்கு தந்த காசுல உனக்கு தான் வாங்கி வந்தேன்’, என்றாள்.

பாட்டியின் முகத்தில் பழைய நினைவுகளின் ரேகைகள் இழையோடுவது தெரிந்தது. தயக்கத்தோடு புனிதா நீட்டிய இனிப்பு பொட்டலத்தை வாங்கிக்கொண்டாள்.

பாட்டியின் கண்களில் நீர் கரைபுரண்டோடியது. பழைய பாவமும் கரைந்தோடியிருக்க வேண்டும்.


Moral : நாம் யாரே வேண்டாம் என்று அவமதிக்கிரோமோ அவர்கள் தான் நமக்கே தெரியாமல் உதவுவார்கள்.

ஒருவரை புண்ப்படுத்துவது எளிது அவரே மனம் குளிர வைப்பது தான் கடினும்