‘பாட்டி உனக்கு தான் வயசாகிப்போச்சே, இந்த வயசுல உனக்கு என்ன இனிப்புல இவ்வளவு ஆசை. என்னை தொந்தரவு செய்யாம சீக்கிரம் செத்து தொலையேன். ஒரு சனியன் ஒழிஞ்சதா நினைச்சு நிம்மதியா இருப்பேன்’, அக்கினி பிளம்புகளாக துவேசம் கலந்து வார்த்தைகளை அள்ளி வீசிய நீலாவுக்கு பதினெட்டு வயது. கல்லூரியில் முதலாமாண்டு தன் மாமா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருநதாள்.
‘நீ என்னை மட்டுமா வளர்த்த, புனிதாவையும் சேர்த்து தானே வளர்த்த. அப்புறமேன் என்கிட்ட மட்டும் அத கொண்டா, இதக் கொண்டாண்ணு நச்சரிக்கிற…’
கட்டிலில் படுத்திருந்த பாட்டிக்கு நீலாவின் பேச்சு தேள் கொட்டியது போல் இதயத்தில் வலித்த்து. ‘இந்த வார்த்தையை முடியாத காலத்தில் கேட்பதற்காகவா உங்களையெல்லாம் பொத்திப் பொத்தி வளர்த்தேன்’, பாட்டி மனதிற்குள் புழுங்கினாள்.
பாட்டி எதையோ சொல்ல வாயெடுக்க அதைக்கேட்காமலேயே நீலா அடுத்த அறைக்குள் புகுந்து கதவை ‘பட்’ டென்று சாத்தினாள்.
நீலாவின் வார்த்தைகள் பாட்டியின் தலைக்குள் மேகக் கூட்டமாய் சூழந்து வட்டமிட்டு பாரமேற்ற பழைய நினைவுகள் அமில மழைத்துளியாய் மனதில் விழத்தொடங்கின.
நீலா, பாட்டியின் மகள் வயிற்று பேத்தி. புனிதா, மகன் வயிற்று பேத்தி. மகன் வீட்டிலேயே பாட்டியும் நீலாவும் இருந்தனர். புனிதாவிற்கும் நீலாவிற்கும் வயது அப்போது பன்னிரெண்டு இருக்கும். நீலாதான் மூத்தவள். இருவரும் ஓரிரு மாத இடைவெளியில் பிறந்தவர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் தான் படித்துவந்தனர்.
புனிதாவின் அம்மா சுகவீனமுற்று மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாகிவிட, வீட்டுப் பொறுப்பு முழுவதுமாக பாட்டியிடம் வந்தது.
அது ஒரு புதன்கிழமை. பாட்டி கறிச்சோறு ஆக்கி இருந்தாள்.
பாட்டியின் கைப்பக்குவம் மிக அருமையாக இருக்கும். அதுவும் முந்திரி அண்டிப் பருப்பு போட்டு பாட்டி சமைக்கும் கௌதாரி கறிக்குழம்பிற்கு தனிச்சுவையே உண்டு.
பள்ளிவிட்டு வந்த புனிதாவிற்கு பாட்டியின் கறிக்குழம்பு நாக்கில் எச்சிலை ஊறவைத்தது.ஆனால் பாட்டி நீலாவிற்கு கறிச்சோறும் தனக்கு பழைய சோழக் காடியும் மாங்காய் தொக்கும் தட்டில் கொண்டு வைத்தபோது புனிதாவிற்கு எல்லாமே சூனியமாக தெரிந்தது.மனம் பொறுக்காது புனிதா, ‘பாட்டி எனக்கும் கறிச்சோறு தாயேன்’ என்றாள்.
‘உன்னை பெத்த மவராசி சாவக்கிடக்கா, உன் நாக்கு கறிச்சோறு கேட்குதாக்கும். இன்னும் ரெண்டு நாளுல அவபோயிருவா, அதுக்கு பின்னாடி உனக்கு இந்த காடி கூட கெடைக்காது. இப்பவே நல்லா கொட்டிக்க’, பாட்டியின் நாவிலிருந்து முள்ளாய் வார்த்தைகள் வந்து சின்னப்பெண் புனிதாவைத் தைத்தது.
பாவம் புனிதா, தன் தகப்பனின் உழைப்பில் வந்த பலனை அனுபவிக்க முடியவில்லை. அது புரியும் வயதும் அவளுக்கில்லை. வாய்விட்டு அழுவதற்குக்கூட தைரியமின்றி வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே மனதிற்குள்ளேயே அம்மாவை நினைத்துக்கொண்டாள், ‘அம்மா இப்போது பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எலும்பில்லாத கறியாக எடுத்துத் தருவாளே’, புனிதாவின் மனம் ஏங்கியது.
புனிதாவின் வடியும் கண்ணீரைப்பார்த்த பாட்டி,’அழுதழுது வீட்ட உருப்படாம ஆக்கிடாத’, வெடித்தாள்.
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு பாட்டி பழைய நினைவிலிருந்து கலைந்தாள்.
கதவருகே புனிதா ஏதோப் பொட்டலத்துடன் நின்றிருந்தாள்.
பாட்டியின் அருகில் ஆதரவாய் வந்து, ‘பாட்டி, நீலா சொன்னதெல்லாம் நானும் கேட்டேன். கவலைப்படாதே. நான் இனிப்பு கொண்டாந்திருக்கேன். ஊட்டிவிடவா’ கேட்டுக் கொண்டே ஒரு விள்ளல் எடுத்து பாட்டியின் வாயில் ஊட்டினாள்.
பொட்டலத்தையும் பாட்டியிடம் நீட்டி, ‘இந்தா பாட்டி, இது உனக்கு தான். அம்மா செலவுக்கு தந்த காசுல உனக்கு தான் வாங்கி வந்தேன்’, என்றாள்.
பாட்டியின் முகத்தில் பழைய நினைவுகளின் ரேகைகள் இழையோடுவது தெரிந்தது. தயக்கத்தோடு புனிதா நீட்டிய இனிப்பு பொட்டலத்தை வாங்கிக்கொண்டாள்.
பாட்டியின் கண்களில் நீர் கரைபுரண்டோடியது. பழைய பாவமும் கரைந்தோடியிருக்க வேண்டும்.
Moral : நாம் யாரே வேண்டாம் என்று அவமதிக்கிரோமோ அவர்கள் தான் நமக்கே தெரியாமல் உதவுவார்கள்.
ஒருவரை புண்ப்படுத்துவது எளிது அவரே மனம் குளிர வைப்பது தான் கடினும்
No comments:
Post a Comment