ஒருநாள் குரங்கு ஒன்று ஆற்றங்கரைப் பக்கம் வந்தது. அப்போது ஆற்றிலே சில செம்படவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அந்தக் காட்சியை ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு குரங்கு ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. செம்படவர்கள் வலை வீசுவது மிகவும் எளி தான செயல் என்று குரங்கிற்குத் தோன்றியது.
ஒவ்வொரு தடவையும் செம்படவர்களுக்கு வலையில் ஏராளமான மீன்கள் கிடைத்தன. இதே மாதிரி தினமும் வீசினால் ஏராளமான மீன்கள் கிடைக்கும் போல் இருக்கிறதே. மீன் பிடித்தே தினமும் வயிறு நிறைய சாப்பிடலாம்போல் இருக்கிறதே என்று குரங்கு எண்ணிக் கொண்டது. நண்பகல் நேரம் வந்ததும் செம்படவர்கள் வலைகளைக் கரையில் வைத்துவிட்டுச் சாப்பிடுவதற்காகச் சென்றனர். குரங்கு மரத்தை விட்டு மடமடவெனக் கீழே இறங்கிற்று. செம்படவர்கள் வைத்துவிட்டுப் போயிருந்த வலை ஒன்றை எடுத்து செம்படவர்கள் போலவே ஆற்றில் வீசி எறிந்தது. குரங்கைவிட வலை கனம் மிகுந்திருந்ததால் அது குரங்கையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஆற்றில் போய் விழுந்தது.
வலைக்கு அடியில் குரங்கு சிக்கிக் கொண்டதால் அது தண்ணீரிலிருந்து மீண்டும் கரையை அடைய முடியாமல் தத்தளித்தது. இன்னும் சற்று நேரம் கழித்து இருந்தால் குரங்கு நீரில் அமிழ்ந்து இறந்து போயிருக்கும். நல்லவேளையாக செம்படவர்கள் அங்கு வந்துவிட்டனர். ஆற்று நீரில் குரங்கு தத்தளிப்பதைக் கண்டதும், நீரில் பாய்ந்து நீந்திச் சென்று வலையிலிருந்து குரங்கை விடுவித்துக் கொண்டு கரை சேர்ந்தனர். உயிர் பிழைத்த குரங்கு மகிழ்ச்சியோடு அந்த இடத்தை விட்டு ஓடியது.
Moral: நமக்குத் தெரியாத விஷயங்களில் எல்லாம் இதுக்குதான் தலையிடக்கூடாது என்பது.
No comments:
Post a Comment