Sunday, May 10, 2015

இல்லறத்தானின் கடமைகளாக கர்ம யோகத்தில் சுவாமி விவேகானந்தர் கூறுவது

இல்லறத்தானின் முதற்கடமை வாழ்க்கைக்கான பொருள் ஈட்டுதல் ஆகும். ஆனால், பொய்சொல்லியோ, ஏமாற்றியோ, கொள்ளையடித்தோ அவன் அதைச் செய்யாமல் இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும். தன் வாழ்க்கை இறைவனுக்கும், ஏழை எளியவர்க்கும் சேவை செய்வதற்காக அமைந்துள்ளது என்பதை அவன் மறக்கக் கூடாது. (8.24)

தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள் என்பதை உணர்ந்து இல்லறத்தார் எப்போதும் எல்லா வழிகளிலும் அவர்களை மகிழ்ச்சியுறச் செய்யவேண்டும். தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால் இறைவனும் மகிழ்ச்சி அடைகிறார். பெற்றோரிடம் கடின வார்த்தைகள் பேசாத பிள்ளை உண்மையிலேயே சிறந்தவன் (8.25.26)

பெற்றோரின் முன்னர் ஒருவன் கேலியோ, கிண்டலோ செய்யக்கூடாது. படபடப்பாக நடந்து கொள்ளக்கூடாது.  கோபத்தையோ ஆத்திரத்தையோ காட்டக் கூடாது. தாய் தந்தையரின் முன் பணிந்து வணங்க வேண்டும். அவர்களின் முன்னால் எழுந்து நிற்கவேண்டும். அவர்கள் கூறும் வரை உட்காரக்கூடாது. (8.30,31)

தாய், தந்தை குழந்தைகள்,மனைவி, மற்றும் ஏழைகளுக்கு உணவும் உடையும் வழங்காமல் இல்லறத்தான் தான் மட்டும் ஏற்றுக் கொள்வானேயானால் அவன் பாவம் செய்தவன் ஆவான். இந்த உடல் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் தாயும் தந்தையும்.. அவர்களுக்கு நன்மை செய்வதற்காக ஓராயிரம் துன்பங்களையும் ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். (8.33, 34, 36, 37)


இது போன்றே ஒருவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. அவை

மனைவியைத் திட்டக்கூடாது. அவளைத் தன் தாயைப்போலவே போற்றிக்காக்கவேண்டும். கடுமையான துன்பங்களிலும் பிரச்சினைகளிலும் கூட அவன் மனைவியிடம் கோபம் காட்டக் கூடாது. (8.39)

மனைவியைத் தவிர வேறு பெண்ணை ஒருவன் நினைப்பானேயானால், மனதாலேனும் தீண்டுவானே யானால், அவன் இருள் சூழ்ந்த கொடிய நரகத்தை அடைவான். (8.40)

பெண்களுக்கு முன்னால் ஒருவன் முறையற்ற பேச்சுக்களைப் பேசக்கூடாது. தன்னைப் பற்றிப்பெருமையடித்துக்கொள்ளக்கூடாது. “ நான் இதைச்செய்தேன்”,  ”நான் அதைச் செய்தேன்” என்றெல்லாம் பேசக் கூடாது. (8.41)

இல்லறத்தான் தன் மனைவியைப் பணம், ஆடைகள், அன்பு,நம்பிக்கை, இனிய மொழிகள் இவற்றால் எப்போதும் மகிழ்விக்க வேண்டும். அவளைத் தொந்திரவு செய்கின்ற எதையும் செய்யக்கூடாது. கற்பு நிறைந்த மனைவியின் அன்பைப்பெறுவதில் வெற்றிபெற்றவன் தன் கடமையில் வெற்றி பெற்றவனாவான். அவனுக்கு எல்லா வித நற்குணங்களும் வந்து சேர்கின்றன. (8.42,44)

கீழ்க்கண்டவை ஒருவன் தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளாகும்:-

நான்காவது வயது வரை ஒருவன் தன் மகனை அன்போடு போற்றி வளர்க்க வேண்டும். பதினாறு வயதுவரை கல்வி புகட்ட வேண்டும். இருபது வயதில் அவனை எங்காவது ஒரு பணியில் அமர்த்தவேண்டும் அதன் பிறகு அவனைத் தனக்கு சமமாகவும் அன்போடும் நடத்தவேண்டும். மகளையும் இது போன்றே அன்போடு வளர்க்கவேண்டும். மிகுந்த கவனத்துடன் கல்வி கற்கச் செய்ய வேண்டும் அவளைத் திருமணம் செய்து கொடுக்கும் போது அவளுக்கு நகைகளும் சொத்துக்களும் தரவேண்டும். (8-45,47)

பிறகு சகோதர சகோதரிகள், அவர்கள் ஏழையாக இருந்தால் அவர்களுடைய பிள்ளைகள், பிற உறவினர், நண்பர், வேலைக்காரர் என்று இவர்களிடமும் அவனுக்குக் கடமைகள் உள்ளன. அதன் பிறகு அவன் வாழும் கிராமத்தில் உள்ள மக்கள், ஏழைகள் மற்றும் அவனிடம் உதவிக்கென்று வருபவர்கள் இவர்களுக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. வசதி இருக்கும் ஒருவன் உறவினருக்கும் ஏழைகளுக்கும் ஒன்றும் கொடுக்காமல் போனால், அவன் மனிதன் அல்லன், மிருகம் என்றே கொள்ள வேண்டும். (8.45-50)

உணவு, உடை, உடம்பைப் பராமரிப்பது, முடியை அலங்கரிப்பது இவற்றில் அளவுக்கு அதிகமான பற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லறத்தான் இதயத்தில் தூயவனாகவும் உடம்பைச் சுத்தமாக வைத்திருப்ப்வனாகவும் சுறுசுறுப்பு மிகுந்தவனாகவும், செயல் புரிய எந்த நேரத்திலும் தயாரானவனாகவும்
இருக்க வேண்டும். (8.51, 52)

இல்லறத்தான் பகைவர்களுக்கு அச்சம் தருபவனாக இருக்க வேண்டும். (8.53). அவர்களை எதிர்க்க வேண்டும். அது இல்லறத்தானின் கடமை. ஒரு மூலையில் அமர்ந்து மூக்கைச் சிந்தியபடி அஹிம்சை என்று முட்டாள்த்
தனமாகப் பேசிக் கொண்டிருக்கக்கூடாது. பகைவர்களிடம் தன் வீரத்தைக் காட்டவில்லை என்றால், அவன் கடமை தவறியவனாகிறான்.  நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அவன் ஆட்டுக்குட்டி போல் அடங்கி
நடக்க வேண்டும்.

இல்லறத்தான் தீயவர்களுக்கு மரியாதை தரக் கூடாது. அது அவனது கடமை. ஏனென்றால் தீயவர்களுக்கு மரியாதை செய்தால் அவன் தீமையை வளர்க்கிறான். அது போலவே போற்றலுக்கு உரியவர்களையும்
நல்லவர்களையும் மதிக்காதிருப்பது பெரிய குற்றமாகும். ( 8. 53)

நண்பர்களைத்தேர்ந்தெடுப்பதில் அவன் அவசரப் படக்கூடாது. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் முறை தவறி எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடாது நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புவர்களின் செயல்களையும், அவர்கள் பிறருடன் பழகும் விதத்ததையும் கவனிக்க வேண்டும். அதை ஆராய வேண்டும். அதன் பிறகே நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டும். (8.54)

முன்று விஷயங்களை அவன் பேசக்கூடாது. தன் புகழைப் பொது இடத்தில் பேசக் கூடாது. தன் பெயரையோ திறமையோ தானே பரப்பக் கூடாது. செல்வத்தைப் பற்றியோ, தன்னிடம் தனிமையில் பிறர் சொன்னதையோ சொல்லக்கூடாது. (8.56)

தான் ஏழை என்றோ பணக்காரன் என்றோ எதுவும் அவன் பேசுவது நல்லதன்று. அவன் தன் செல்வத்தைப் பற்றிப்பெருமை அடித்துக் கொள்ளக்கூடாது. இந்த விஷயங்களைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும். இது, உலக வழக்கமட்டுமல்ல, அவனது கடமையும் ஆகும். இவற்றை எல்லாம் அவன் கடைப் பிடிக்க வில்லை என்றால் அவன் நன்னெறியில் செல்லாதவன் என்று கருதப்பட வேண்டும்.

இல்லறத்தான் சமுதாயம் முழுவதன் ஆதாரமாகவும் தாங்கும் தூணாகவும் இருக்கிறான். சமுதாயத்தில் முக்கியமாகச் சம்பாதிப்பவன் அவனே. ஏழைகள், பலவீனர்கள், குழந்தைகள், வேலை செய்யாத பெண்கள் ஆகிய எல்லோருமே அவனைச் சார்ந்தே வாழ்கிறார்கள். எனவே அவன் செய்தே ஆகவேண்டிய கடமைகள் உள்ளன. இந்தக் கடமைகள், அவற்றைத்திறம்படச் செய்கின்ற வலிமையை அவனுக்குத் தருபவையாக அமைய வேண்டும். தனது லட்சியத்திற்குப் பொருந்தாத, கீழான செயல்களைச் செய்கிறோம் என்ற உணர்வை அவனுக்குத் தருபவையாக அவை அமையக் கூடாது. பலவீனம் காரணமாக அவன் எதையாவது செய்து விட்டாலோ, ஏதேனும் குற்றம் செய்துவிட்டாலோ அதை எல்லோரிடமும் சொல்லக் கூடாது. அவன் ஈடுபட்டிருக்கின்ற ஒரு முயற்சி தோல்வியையோ தழுவும் என்று கண்டால் அதையும் பிறரிடம் அவன் சொல்லக் கூடாது. (8.57)

இப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது தேவையில்லாதது மட்டுமல்ல. அது, அவனது உறுதியைப் பாதித்து, அவனது சொந்தக் கடமைகளையும் ஆற்ற முடியாமல் செய்துவிடும். அதே வேளையில் பின்வரும் இவற்றை அடைய அவன் கடினமாகப் பாடுபடவேண்டும்--முதலில் அறிவு,இரண்டாவது செல்வம். (8.58)

இது அவனது கடமை. கடமையைச்செய்யாதவன் மனிதனே அல்லன். செல்வம் சேர்ப்பதற்காகப் பாடுபட்டு உழைக்காத இல்லறத்தான் நன்னெறியைப் பின்பற்றாதவன். அவன் உத்வேகம் இல்லாதவனாகவும் சோம்பல் வாழ்க்கையில் திருப்தி அடைபவனாகவும் இருப்பவன், நன்னெறியில் செல்லாதவன். ஏனென்றால் அவனை நம்பி நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.

செல்வம் சேர்க்க வேண்டும் என்ற துடிப்போடு ஒரு நூறு பேராவது இல்லையென்றால், அவர்கள் பணம் சேர்க்கவில்லையென்றால், இந்த நாகரிகமும், இந்த அன்ன சத்திரங்களும், மாளிகைகளும் இங்கே இருந்திருக்குமா?, எனவே பணம் சேர்ப்பது தவறல்ல. ஏனென்றால், அந்தப் பணம் பகிர்ந்தளிக்கவே பயன்படுகின்றது. வாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் மையமாக இல்லறத்தான் இருக்கிறான். எனவே, நல்வழியில் செல்வம் சேர்ப்பதும், செலவிடுவதும் அவனுக்கு ஒரு வழிபாடு ஆகிறது. நல்ல காரியங்களுக்காக நல்ல வழிகளில் பணம் சம்பாதிப் பதற்காக உழைக்கின்ற இல்லறத்தான் செய்வதும், குகையில் அமர்ந்து முக்திக்காகப் பிரார்த்திக்கும் தபஸ்விகள் செய்வதும் விஷயத்தில் ஒன்று தான். இறைவனிடமும் அவனது படைப்பின் மீதும் உண்டாகிற பக்தியால் உந்தபட்ட்,ஒரே நற்பண்பின் இரண்டு பக்கங்களான சரணாகதி, தியாகம் என்பவற்றையே நாம் காண்கிறோம். நற்பெயர் பெற. அவன் எல்லா வழிகளிலும் பாடுபட வேண்டும். சூதாடுவதையும் தீயோர் சேர்க்கையும் விடவேண்டும். பொய் பேசக் கூடாது. பிறருடைய துன்பத்திற்கு எந்த விதத்திலும் காரணமாகக் கூடாது. (8.58)

பல நேரங்களில் மனிதர்கள் தங்களால் இயலாத ஒன்றில் ஈடுபட்டு விடுகிறார்கள். எனவே அதைச் செய்து முடிப்பதற்காக மற்றவர்களை ஏமாற்ற நேர்கிறது. அத்துடன் எல்லா விஷயங்களிலும் காலத்தின் பங்கைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு காலத்தில் தோல்வியாக இருந்தது மற்றொரு வேளையில் பெரிய வெற்றியாக மாறிவிடக் கூடும்.(8.59)

இல்லறத்தான் உண்மையையே பேசவேண்டும். அதையும், பிறர் விரும்புகின்ற வகையிலும் அவர்களுக்கு நன்மை செய்கின்ற விதத்திலும் பேச வேண்டும். பிறருடைய விஷயங்களைப்பற்றி அவன் பேசக் கூடாது. (8.62))

குளங்கள் வெட்டுதல், சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்கள் நடுதல், மக்களுக்கும் விலங்குகளுக்கும் சத்திரங்கள் கட்டுதல், சாலைகளும் பாலங்களும் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்யும் இல்லறத்தான், பரம யோகிகள் செல்லும் குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்கிறான். (8.63)

எந்தச் சூழ்நிலையில் நாம் வைக்கப் பட்டிருக்கிறோமோ, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்துள்ள கடமைகளை நாம் செய்ய வேண்டும். எல்லா பலவீனங்களையும் ஒதுக்கித் தள்ளவேண்டும். வேதங்கள் 'பயமின்மை' என்னும் வார்த்தையையே திரும்பத்திரும்ப கூறுகின்றன. பயம் பலவீனத்தின் அடையாளம். உலகத்தின் கேலியையோ அவமதிப்பையோ பொருட்படுத்தாது ஒருவன் தன் கடமைகளை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும்..


No comments:

Post a Comment