கும்பகோணம் மகாமகம் 2016
==========================
கும்பகோணம் மகாமகம் குளத்தில் மன்மத வருடம், உத்திராயணம், சிசரருது, மாசிமாதம் 10ம்நாள்(22 பிப்ரவரி 2016) திங்கள் கிழமை, வளர்பிறை பவுர்ணமி(இரவு 11:49 வரை பின்னர் பிரதமை திதி), மகம் நட்சத்திரம்(அதிகாலை 5:27 முதல் மறுநாள் 23.2.2016 செவ்வாய் காலை 7:22 வரை) அதிகண்ட யோகம் இரவுக்கு பின் 1:43 மணி வரை, பத்திரை கரணம் (பகல் 11:09 வரை) அடுத்து பவம் இரவு 11:49 வரை) கூடிய தினத்தில் சூரியன் கும்பத்திலும், பூர்ணசந்திரன் மகம் நட்சத்திரத்திலும், குரு சிம்ம ராசியிலும் நிற்க மகாமகம் கடைபிடிக்கப்படுகிறது.
மகாமகம் வானியல் விளக்கம்
--------------------------------------------------
சூரியன், பூமி, சந்திரன், குரு கிரகம், மகம் நட்சத்திரம் ஆகிய ஐந்து வானியல் பொருட்கள் நேர்கோட்டில் வரும் காலமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் இதுபோல் வரும். இந்த காலத்தில் சூரியனுக்கு எதிர்நிலையில் குரு கிரகம் முழுநிலவு போல் முழுவிட்டத்துடனும் அதன் சந்திரன்களுடனும் வானில் அழகாக தோன்றும் இதை பைனாகுலர் மூலம் காணலாம்.
மகாமகம் குளத்தில் நீராடல்
-------------------------------------------
கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இக்குளத்தில் மாசி மாதத்தில் மற்றும் சிறப்பாக மகத்தன்று நீராடினால் யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி உள்ளிட்ட பன்னிரெண்டு புண்ணிய நதிகளில் மக்கள் நீராடிய பலன்கிட்டும். மேலும் இப்பிறவியில் பாவச்சுமைகளை நீக்கவும் தங்களின் புனிதத் தன்மையை பெறவும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வழிபடுதல் நன்று. வரயிலாதவர்கள் அருகில் இருக்கும் கோவில் குளத்தில் நீராடி கும்பேஸ்வரரை தியானித்து சிவபுராணம் படித்து வில்வம் சாற்றினால் பலன்கிட்டும்.
அருள்மிகு. ஆதிகும்பேஸ்வரர் நீராடல் நேரம்:
-----------------------------------------------------------------------
அன்று கும்பகோணம் ஸ்தல நேரப்படி பகல் 11:18 மணிக்கு மேல் பிற்பகல் 1:20 மணிக்கு முன்னர் ரிஷப லக்னத்தில், ரிஷப வாகனத்தில் மகாமகம் குளத்திற்கு வருகைதந்து புனிதநீராடி பக்தர்களின் பாவங்களை நீக்கி அருள்புரிவார்.
மாசி மகம் முக்கியத்தை சொல்லும் புராண கதைகள்
-----------------------------------------------------------------------------------
மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித நீராடலாம் என புராணங்கள் சொல்கின்றன தெரியுமா? அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் நாட்கள் தான் அவை. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்மதேவன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. அத்தினமே மகாமகம். மாசி மாதத்தில் மாசி மகப் பெருவிழா பத்துத் தினங்கள் வரை நடைபெறும். அசுவினி நட்சத்திரம் கூடிய நன்நாளில் கொடி ஏற்றஞ் செய்து எட்டாவது நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளான மகம் நட்சத்திரம் கூடிய முழுநிலவு நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும் சூரியன், கும்ப ராசியிலும் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழா. ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார். அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இதன் பழைய பெயர், திருக்குடந்தைக் காரோணம். மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில்.
குந்தியும், மாசிமகமும்:
-------------------------------------
குந்திதேவிக்கு, சூரியன் மூலமாக கர்ணன் அவதரித்தான். திருமணமாவதற்கு முன் கர்ணனைப் பெற்ற குந்திதேவி, குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்தப் பாவம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஒரு முனிவரைச் சந்தித்த குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள். அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்? என்று இறைவனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.
மாசிமக தலம்:
-----------------------
காவிரி நதி ஏழு கட்டங்களாக பாய்ந்து வளம் பெருக்குகிறது. தலைக்காவிரி, அகன்றகாவிரி, பஞ்சநதம், கும்பகோணம், மத்தியார்ச்சுனம், மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம் ஆகியன அவை. இவற்றில் நடுநாயகமாகத் திகழும் தலம் கும்பகோணம்.
ஒவ்வொரு முறை பிரம்மதேவன் தூங்கும் பொழுது பிரளயம் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஒரு முறை அவ்வாறு நடந்ததன் தொடர்ச்சியாகப் பிரளயத்திற்கு பின்பு கலியுகத்திற்கு முன்பு உயிர்களை உருவாக்கும் விதைகளையும் அமிர்தமும் கொண்ட பானை ஒன்று இங்கே இந்த குளத்தில் இருப்பதற்காக இங்கு வந்து சேர்ந்தது. சிவபெருமான் ஒரு வேடன் வேடமிட்டு அம்பெய்து இந்த பானையை உடைத்து உயிர்கள் ஜனிப்பதற்கு ஏது செய்தார். "கும்பம்" என்றால் பானை "கோணம்" என்றால் உருக்குலைந்து என்பதால் கும்பகோணம் பெயர் பெற்றது.
ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும். அப்புண்ணியத் தலங்களில் வாழ்வோர் செய்த பாவங்கள் காசியிலுள்ள கங்கையில் நீராடினால் அகலும். காசியிலுள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணம் தீர்த்தத்தில் நீராடினால் விலகும். கும்பகோணத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால்தான் அகலும் என வடமொழி நூல் வலியுறுத்திக்கூறுகிறது. கும்பகோணத்திலுள்ள தீர்த்தம் மகாமக தீர்த்தம். அமுதத்தின் ஒரு பகுதி இங்கு தீர்த்தமானதால் அமுத தீர்த்தம் எனவும், பிரமன் இத் தீர்த்தத்தினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து ஆராதித்ததால் பிரம தீர்த்தம் எனவும் பெயர் பெற்றது.
மகாமக குளம் மற்றும் கோவில்கள்
-------------------------------------------------------
மகாமகக்குள மண்டபங்கள் அனைத்தும் விஜயரகுநாத மன்னர் அளித்த சோடச மகாதானத்தின் வாயிலாகக் கட்டப்பட்டன. இப்பணியை முன்னின்று நடத்தியவர் அவருடைய மந்திரியான கோவிந்த தீட்சிதர் ஆவார். சோடசம் என்பது 16ஐக் குறிக்கும்.
இக்குளக்கரையில் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் (மண்டபங்கள்) காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், இடபேஸ்வரர், பாணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்தேஸ்வரர், ஷேத்ரபாலேஸ்வரர் என மொத்தம் 16 வகையான சிவலிங்கங்கள் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்படங்களில் காணப்படுகின்றன.முகுந்தேஸ்வரர் மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த குளத்தின் நடுவே அமைந்துள்ள தீர்த்தக் கிணறுகள் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவை வாயு தீர்த்தம், கங்கா தீர்த்தம்,பிரும்ம தீர்த்தம்,யமுனா தீர்த்தம், குபேர தீர்த்தம்,கோதாவரி தீர்த்தம் , ஈசான தீர்த்தம் , நர்மதை தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,அக்னி தீர்த்தம், காவிரி தீர்த்தம், யம தீர்த்தம், குமரி தீர்த்தம், நிருதி தீர்த்தம், பயோஷினி தீர்த்தம், தேவ தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம், கன்யா தீர்த்தம்.
மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம். இத்தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் மிகவும் சிறப்பானது. இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி புண்ணியம் அடைந்தன. பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும். மாசித்திருவிழாவின் பத்தாம்நாளில் கும்பேஸ்வரர் பஞ்சமூர்த்தியுடன் இந்த குளக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார்.