Sunday, February 19, 2017

மீனுக்குத்தண்டனை தண்ணீரிலா

மீனுக்குத்தண்டனை தண்ணீரிலா.................?????

ஒரு வழியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தாச்சு. இனி அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வரும் என்று கணித்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. புதிய குழப்பங்களும், அராஜகங்களும் முளைத்திருக்கிறது. நம்மைச் சுற்றி வட்டமிடும் விஷயங்களைப் பார்க்கும் போது சட்டம் தவறு செய்பவர்களுக்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு குற்றவாளி, நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் தண்டிக்கப்படுகிறார். அவர் தண்டனைக் காலமாகிய நான்கு ஆண்டுகளும், அதன் பிறகு ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. மொத்தமாக பத்து ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இது சட்டம். ஆஹா! அருமையான சட்டம் என்று பாராட்ட முடியவில்லை. காரணம், அதே நபர் அரசை ஆட்டிப்படைக்கும் கட்சிப் பொறுப்பில் தொடர்வதற்கு எந்த தடையும் சட்டத்தில் இல்லை. குற்றவாளி நேரடியாக அரசில் ஈடுபடமுடியாது. ஆனால், அவரின் எண்ணங்களை அவரின் அடிப்பொடியார்கள் மூலம் சிறையிலிருந்தபடியே நிறைவேற்றிக் கொள்ளலாம். இது எந்த விதத்தில் நியாயம்? திருட்டும் புரட்டும் அரசுக்கு ஆகாது, ஆனால் அரசை வழி நடத்தும் கட்சிக்கு ஆகுமா?

நமக்கெல்லாம் மகாகவி பாரதியாரைத் தெரியும். பாடல் வரிகளால் சுதந்திர வேட்கையை ஊட்டியவர். அவருடைய இறுதி ஊர்வலத்தில் பதினான்கு நபர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். இதையெல்லாம் விட சமீபத்தில் ஊடகங்களில் மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் எழுதிய கடிதம் ஒன்றை பிரசுரித்திருந்தார்கள். அதன் வரிகள் படிப்பவர் மனத்தில் கனத்தை ஏற்படுத்தும். அந்தக் கடிதம் திரு. காமு ரெட்டியாருக்கு முகவரியிடப்பட்டிருந்தது. மகாகவி பாரதியாரின் மறைவிற்கு பிறகு அவரின் குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது. கொஞ்ச நஞ்ச கஷ்டமல்ல. ஒவ்வொரு வேளை சோற்றுக்கும் பிறரை எதிர்பார்க்கும் நிலை. அவர்களின் கஷ்டத்தை தெரிந்து கொண்ட திரு. காமு ரெட்டியார் மளிகைப் பொருட்களும், விறகும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தார். பல வருடங்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார். திடீரென்று பொருட்கள் வருவது நின்று போனது. பட்டினியால் வாடிய செல்லம்மாள் அவர்கள் காமு ரெட்டியாருக்கு ஒரு நினைவூட்டல் கடிதம் எழுதினார். காமு ரெட்டியார் அளித்த வாக்குறுதியை சுட்டிக்காட்டி தனக்கு மளிகைப் பொருட்களும், விறகும் அனுப்பும்படி கேட்டிருந்தார். காமு ரெட்டியாரின் பதிலுக்காக காத்திருந்தார். நீண்ட நாட்களாகியும் பதில் இல்லை. காரணம், காமு ரெட்டியார் இறந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. இது செல்லமாளுக்கு தெரியாது. பிள்ளைகளே பெற்றோர்களை காப்பாற்றாத இன்றைய உலகில் காமு ரெட்டியாரின் பெருத்தன்மையை பாராட்டுவதா? சுதந்திர போராட்ட சிந்தனையிலே குடும்பத்தை கவனிக்காமல் போன பாரதியாரின் தியாகத்தை பாராட்டுவதா? தேசத்துக்கு உழைத்த குடும்பங்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டது என்பதை இந்த ஒரு சிறு சம்பவம் நமக்கு உணர்த்தும். அப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் இன்று அதர்மத்தின் பிடியில் சிரிப்பாய் சிரிப்பதை பார்க்க முடிகிறது.

தொலைக்காட்சியில் மரியாதைக்குறிய கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி வி.கே. சசிகலா அவர்கள் சிறைக்குச் செல்லும் காட்சியை காண்பித்தார்கள். வழி நெடுக தொண்டர்கள் நின்று கதறினார்கள். முன்னும், பின்னும் கார்கள் புடைசூழ பெங்களூரு சிறைச்சாலையை நோக்கி வண்டிகள் சீறிப்பாய்ந்தது. இவர்களோடு மக்கள் பிரதிநிதிகளும் அவரை பின்தொடர்ந்து வழியனுப்பியதை பார்க்க முடிந்தது. இந்த சம்பவங்களுக்கிடையில் சமாதியில் ஒன்றரை டன் எடையில் ஓங்கியடித்து சபதம் வேறு. இதுபற்றி தொடர்ந்து எழுதுவதற்கு எனக்கு மனமில்லை. அப்படியே விடுகிறேன்.

சுதந்திரத்திற்கு போராடியவரின் குடும்பங்கள் சோற்றுக்கு திண்டாடியது. பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் பதினான்கு நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளை தற்போதைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். என் சிந்தனை எவ்வளவு கேவலமானது என்பதை இந்த ஒப்பீடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சிறைச்சாலையின் வாயிலுக்கு சென்றவுடன் திருமதி வி.கே சசிகலா இறங்கிக்கொள்ள அதற்காகவே காத்திருந்தது போல ஒரு கூட்டம் அவருடன் வந்த கார்களை அடித்து நொறுக்குகிறது. யார் யாரை தாக்குகிறார்கள்? அவர்களின் உள்நோக்கம் என்ன? என்பது யாருக்கும் புரியவில்லை. அந்தப் பிரச்னை அத்தோடு முடிந்தது. தாக்கியவர்களின் நோக்கத்தைப் பற்றி யாரும் வாய் திறக்கவேயில்லை. ஆனால், சில மணி நேரங்களுக்கு பிறகு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் திரு. சுப்ரமணியன் சுவாமி பேட்டி அளித்தார். 'திருமதி சசிகலாவிற்கு பெங்களூரு சிறையில் பாதுகாப்பில்லை அவரை தமிழ் நாட்டு சிறைக்கு மாற்ற வேண்டும்', என்று கோரிக்கை விடுத்தார்'.

திரு.சுப்ரமணியன் சுவாமி அவர்களே உங்களுக்கு திருமதி சசிகலாவின் பாதுகாப்பு முக்கியமா? அல்லது தமிழ் நாட்டு சிறைக்கு அவரை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பது முக்கியமா? இந்த வழக்கைப் பொறுத்தவரை செல்வி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நீங்கள் அடித்த அந்தர் பல்டிக்கான காரணம் எங்களுக்கு புரியவில்லை. திருமதி சசிகலாவின் பாதுகாப்பில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவரை திகார் ஜெயிலுக்கு மாற்றும்படி அறிவுரை வழங்குங்கள். திகார் ஜெயிலின் பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், பக்கத்தில் இருக்கும் புதுவை துணை நிலை ஆளுனரை கேளுங்கள். அவருக்கு திகாரின் அனுபவம் அதிகம். இந்த அறப்பணி உங்களுக்கும் நீங்கள் சார்ந்த கட்சிக்கும் நிச்சயமாக பெருமை சேர்க்கும்.

எவ்வளவோ அரும்பாடுபட்டு தலைவர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரம் இன்றைய அரசியல்வாதிகளிடம் சிக்கித் தவிக்கிறது. "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஊழல்வாதிகளுக்கு கிடைத்த சவுக்கடி. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இதுதான் தண்டனை" என்று பேசி வரும் பல அரசியல்வாதிகள் இதுவரை சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளாதவர்களே தவிர, பரிசுத்தமானவர்கள் அல்ல. இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. 'திருடுவது குற்றமில்லை. மாட்டிக்கொண்டால் தான் குற்றம்'. அதாவது நியாயப்படி குற்றம். சட்டப்படி குற்றமல்ல. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நியாயத்திற்கும், சட்டத்திற்கும் இடைவெளியில் பலே திருடர்கள் ஒய்யாரமாக வாழ்க்கையை ஓட்டுகின்றனர். முடிசூடா மன்னர்களாக வலம் வருகிறார்கள். இப்படிப்பட்ட சட்ட அணுகுமுறை நமக்கு பயன் தராது. நம்முடைய சட்டத்திற்கு வயதாகிவிட்டது. அது தள்ளாடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் அதற்கு வலுவூட்ட வேண்டும். இதற்காக சட்டங்களை கடுமையாக்க வேண்டிய அவசியமில்லை. சட்டத்தின் ஓட்டைகளை தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றார் போல அடைக்க வேண்டும். இந்த தருணத்தில் ஒரு குட்டிக்கதையை பார்ப்போம்.

ஒரு நாடு. ஒரு திருடன். அவன் பலே கெட்டிக்காரன். எந்த தவறை செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான். மாட்டிக் கொள்ள மாட்டான். அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும், சாட்சிகளும் இது நாள்வரை இல்லை. அதனால் ஊரில் பெரிய மனிதராக வலம் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கூட்டமும் இருந்தது.

'இவ்வளவு தைரியமாக உலவி வருகிறாயே! உனக்கு பயமாக இல்லையா?' என்று எல்லோரும் கேட்பார்கள்.

'நான் தவறு செய்வதை நிரூபிக்கும் ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள். பிறகு தண்டியுங்கள்', என்பான் திருடன்.

அந்த நாட்டு அரசனும் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தான்.

அந்த நாட்டிற்கு ஒரு சாது வந்தார். அவரிடம் திருடனை பற்றியும், அரசனின் அமைதியை பற்றியும் மக்கள் முறையிட்டனர்.

ஒலை ஒன்றை எடுத்தார் சாது. அதில் ஏதோ எழுதினார். அதை அரசனிடம் கொடுத்தனுப்பினார். அன்று மாலை, திருடனை விருந்திற்கு அழைத்தார் அரசர். விருந்திற்கு சென்ற திருடன் வீடு திரும்பவில்லை. அன்று இரவே திருடன் தூக்கிலிடப்பட்டான்.

அவனுடைய ஆதரவாளர்கள் நேராக அரசனிடம் சென்றனர். திருடனை தூக்கிலிட்டதற்கான காரணத்தை கேட்டனர். அரசர் அமைதியாக பதிலளித்தார்.

'மக்களே உங்கள் நண்பரை நேற்று விருந்திற்கு அழைத்தேன். அப்போது அவன் ராஜ ரகசியத்தை திருடிவிட்டான். அதனால் அவன் தூக்கிலிடப்பட்டான்', என்றார் அரசர்.

'அப்படி என்ன பொல்லாத ரகசியம்?' என்று கேட்டார்கள் ஆதரவாளர்கள்.

'அது ராஜ ரகசியம். அதை தெரிந்து கொண்டவர்கள் யாரும் உயிருடன் இருக்க முடியாது. நீங்கள் யாராவது தெரிந்து கொள்ள வேண்டுமா?', என்று கேட்டார் அரசர்.

அவ்வளவுதான். அனைவரும் ஓட்டம் பிடித்தனர். நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசி பேசினார்.

'அரசே! அதென்ன ராஜ ரகசியம்? என்னிடமாவது சொல்லுங்கள்', என்று கேட்டார் அரசி.

சாது தனக்கு அனுப்பிய ஓலைச் சுவடியை காண்பித்தார் அரசர். அதில் பின்வரும் வரிகள் எழுதப்பட்டிருந்தது.

"நியாயத்தை கடைபிடித்து, சட்டத்தின் விதிகளையும் மேற்கோள் காட்டி பிறகு தண்டிக்க வேண்டும் என்பது நியாயத்தின் மீதும், தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அநியாயக்காரர்களுக்கு பொருந்தாது. அநியாயக்காரர்களுக்கு முதலில் தண்டனையை கொடுங்கள். பிறகு அதை நியாயப்படுத்தும் விதிகளை தேடுங்கள். தண்ணீரில் வாழும் மீன்களுக்கு தண்டனையை தண்ணீரிலேயே தேடுவது புத்திசாலித்தனமல்ல." என்று எழுதியிருந்தது.

அரசிக்கு உண்மை புரிந்தது. அரசிக்கு மட்டுமல்ல. நமக்கும்தான்.

திருமதி சசிகலாவை வழி நெடுக நின்று வழியனுப்பியவர்களை பார்க்கும் போதும், அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடலாம் என்று அனுமதித்த சிறை நிர்வாகத்தையும் பார்க்கும் போதும், ஜனநாயகம் அரசியல்வாதிகளுக்கு மட்டும் முழுச் சுதந்திரம் அளித்திருப்பது புரிகிறது. இதையெல்லாம் விட ஒன்பது நாட்களுக்கும் மேலாக மேல் ஒரு ரிசார்ட்டில் உட்கார்ந்து கொண்டு பத்திரிக்கையாளர்களையும், ஆயிரக்கணக்கான காவல்துறையினரையும், மக்களையும் பிச்சைக்காரர்கள் போல் ரிசார்ட் வெளியே நிற்கவைத்த பெருமை நம்முடைய எம்.எல்.ஏக்களைச் சாரும்.

எது எப்படி போனால் என்ன. இது மரியாதைக்குறிய மாண்புமிகு சின்னம்மா" வின் அரசு என்று பெருமையாக கூறும் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது.

தொடர்புக்கு:
saadhusriram@gmail.com
தினமணி கட்டுரை...

Friday, February 10, 2017

if Sasikala becomes CM..?

தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்....?

பொறுப்பு ஆளுநர் திரு வித்யா சாகர் ராவ் அவர்கள் ஒரு வேலை திருமதி சசிகலா அவர்களை ஆட்சி அமைக்க கோரி, திருமதி சசிகலா அவர்கள் ஆட்சி அமைத்தால், கண்டிப்பாக அடுத்து வரும் நாட்களில் திரு பன்னீர் செல்வம் அவர்கள் மேல் பல மோசடி வழக்குகள் பாயும்.... அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை மிரட்டி அவருக்கு எதிராக பேட்டியளிக்க நிர்பந்திக்க படுவார்கள்.... இல்லையெனில் அவர்கள் வெளியே வர முடியாது அளவுக்கு வழக்குகள் பாயும்......  

திருமதி சசிகலாவின் குடும்பத்தாரால் அதிகாரப்பூர்வமாக கட்டப்பஞ்சாயத்து செய்து அநியாய விலைக்கு மக்களின் சொத்துகள் பறிக்க படும்....

இன்று எம்.எல்.ஏ. கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப 3 நாட்கள் தனியார் விடுதிகளில் சுகத்திரமாக செயல்படுவது போல், நாளை இவர்கள் யாரை வேண்டுமானாலும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தனியார் விடுதிகளில் சுகந்திரமாக தங்க வைத்து காரியத்தை சாதித்து கொள்வார்கள்..... இவர்கள் தங்குமிடம் முதல்வர் முதல் போலீஸ், நீதிபதி என எல்லாருக்கும் தெரிந்தும் அவர்களை சந்திக்க முடியாது....  அவர்கள் அவ்வளவு பாதுக்காப்பாகவும், சுகந்திரமாகவும்  இருப்பார்கள்....  (சத்தியமா அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பிற்கும் மேல் தனியார் பாதுகாப்பும் சேர்ந்து தரப்படும்).... :) :) :) :) :)

ராம்குமார், ஸ்வாதி மரணம் முதல் முன்னாள் முதல்வர் செல்வி செ.செயலலிதா மரணம்  வரை பல மர்ம மரணங்கள் நடக்கும் எதற்கும் விடை கிடைக்காது.......

மாநிலத்தில் எவ்வளவு அக்கிரமம் நடந்தாலும், முத்த கட்சியினர்  முதல் தொண்டன் வரை யாரும் கேள்வி கேட்க கூடாது,  மீறி கேட்டால் அவர்கள் திமுகவிற்கு விலை போய் விட்டார்கள் என்றும், அவர்களுக்கு பச்சை துரோகி என்று பட்டமளித்து கட்சியினரானால் அவர்கள் ஆதரவு தொலைக்காட்சியில் வசைபாடி அவமானப்படுத்தப்படுவார்கள்......

கழக வரலாறு மற்றும் கட்சியின் முத்த நிர்வாகிகள் பற்றியெல்லாம் எந்த கவலையும் இவர்களுக்கு இல்லை, இவர்களின் தேவையெல்லாம் சசிகலாவிற்கு முதல்வர் பதவி, தடையில்லாமல் தமிழகத்தை கொள்ளையடிக்க வேண்டும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் அவ்வளவே......


-பிரவின் சுந்தர் பூ.வெ.

Wednesday, February 8, 2017

Sasikala Cruel Face

சசிகலாவின் கோர முகம்
========================

தான் முதலவர் ஆக வேண்டுமென்பதற்காக கட்சியில் கிட்டத்தட்ட 43 ஆண்டு காலம் உழைத்தவர் மற்றும்   செல்வி செ. செயலலிதா அவர்களால் உண்மையான விசுவாசியாக கண்டயெடுக்கபட்ட முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் மேல் புழுதி வாரி தூற்றுவது எந்த வகையில் நியாயம்....?

 முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் தெரிவித்த அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மை, அவரை முதல்வராக இருக்கும் படி வற்புறுத்தி விட்டு அவருக்கு எதிராக அமைச்சர்கள்  செயல்பட்டது நியாயமா....?

முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள், திமுகவுக்கு விலை போய் விட்டார் என்று மனசாட்சியே இல்லாமால் வசைபாடுகிறார் திருமதி சசிகலா..... சட்டமன்றத்தில் முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் திமுகவின் செயல்தலைவர் திரு ஸ்டாலின் அவர்களை பார்த்து சிரித்தார் என்பதெல்லாம் ஒரு குற்றசாட்டா ...?     அடிப்படையில் திருமதி சசிகலா அவர்களுக்கு கழக வரலாறு தெரியவில்லை போலும்....... செல்வி செ. செயலலிதா அவர்களுக்கு கலைஞர் அவர்கள் மேல் கோவம் இருந்தாலும், அவரை எதிர்த்து தனிப்பட்ட தாக்குதல்கள் தொடுத்தாலும், திரு ஸ்டாலின் மேல் என்றும் ஒரு சுமுக பார்வை(Soft Corner) இருந்தது, சுனாமி ஏற்பட்ட போது நிவாரண நிதி அன்று திரு ஸ்டாலின் அவர்கள் செல்வி செ.செயலலிதா அவர்களிடம் நேராக சந்தித்து தான் கொடுத்தார்.  அப்பொழுது கூட செல்வி செ.செயலலிதா அவர்கள் தந்தையின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்தார் என்று பேட்டியளித்தார்..... அன்று ஸ்டாலினோடு செல்வி செயலலிதா அவர்கள் பேசினார் என்பதற்க்காக அவருக்கும் துரோகி பட்டம் அளிப்பாரா திருமதி சசிகலா அவர்கள்...?

2016'ல் செல்வி செ.செயலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவின் போது திரு ஸ்டாலின் அவர்களுக்கு பின்வரிசையில் இடமளிக்கப்பட்டது என்று திமுகவினர் கொந்தளித்த போது, அந்த பிரச்னையை பெரிது படித்த வேண்டாம் என்று பெருந்தன்மையாக  சொன்னவர் திரு ஸ்டாலின் அவர்கள், அதற்கு பின் நடந்த சட்டமன்ற கூட்ட தொடரின் போது செல்வி செ.செயலலிதா அவர்கள் திரு ஸ்டாலினுக்கு  முதலில் வணக்கம் தெரிவித்து விட்டு அன்று இருக்கை விசயத்தில் நடந்த கோளறுபடிக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதெல்லாம் தமிழக அரசியல் ஒரு ஆரோக்கியமான பாதையில் செல்வதாக அன்று எல்லோராலும் கருதப்பட்டது. செல்வி செ.செயலலிதா அவர்களின் வழிகாட்டுதலில் பயணம் செய்துவந்த முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் சட்டமன்ற கூட்ட தொடரின் போது எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில் திரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம் சொல்லுவதோ, அவரை பார்த்து புன்முறுவல் இடுவதோ குற்றமா....? 

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி எதிர்ப்பு அரசியல் என்ற மாயை மக்களின் மேல் திணிப்பார்கள்....? காலம் மாறிவிட்டது மக்களுக்கு தெரியும் எது உண்மை எது பொய் என்று........ இனியும் இந்த எதிர்ப்பு அரசியல் செய்து பொழப்பு ஓட்ட முடியாது.......!

முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் திமுக ஆதரவாளர்களுக்கு எதினும் சலுகை செய்கிறார் என்று குற்றம் சாட்டினால் ஏற்றுக்கொள்ளலாம், அதை விடுத்து இந்த சாதாரண விசயத்தை பூதாகரமாக ஆக்கியது முழுக்க முழுக்க திருமதி சசிகலா தான்.....  இன்று நடக்கும் அசாதாரண நிலைக்கு இவரின் அனுபவமின்மையே காரணம்......

அதேப்போல் திரு துரைமுருகன் அவர்கள் சட்டமன்ற கூட்ட தொடரின் போது முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களுக்கு எங்கள் ஆதரவு இருக்கு என்று சொன்னதால் தான், தான் அவசர அவரசரமாக பதவியேற்க கட்சி நிர்வாகிகள் தன்னை வற்புறுத்தியாகவும் அதனால் தான் தான் முதல்வர் பதவி ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக சொல்லுவது முழு பூசிணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.... இவர்கள் திருமதி சசிகலாவை முதல்வராக்க அத்தனை காய்களையும் நகர்த்தி கொண்டு இருந்தது ஊர் அறிந்த விசயம்..... தகுந்த சூழல் இல்லாதால் பொறுமை காத்து கொண்டு இருந்தார்கள், நிலைமை முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களுக்கு சாதகமாகவே இருந்த காரணத்தால் இன்று அவர் மேல் துரோகி பட்டமளித்து வெளியேற்றி விட்டார்கள்.

 இதேபோல் ஒரு நிலைமை கடந்த தேர்தலின் போது எதிர்கட்சியினரால் பரப்ப பட்டது அப்பொழுது செல்வி செ.செயலலிதா அவர்கள் முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களை நேரில் அழைத்து பேசி அப்பொழுதே அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், மேலும் எதிர்கட்சியினரின் சதிக்கு நாங்கள் என்றும் சிக்கமாட்டோம், என்றும் திரு ஓ.பி.எஸ் அவர்கள் என் நம்பிக்கைக்கு உரியவர் என்று தெளிவாக சொன்னார். அது ஆளுமை பண்பா அல்லது எதிர்க்கட்சியில் ஒருவர் ஆதரவாக பேசினார் என்பதற்க்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 43 ஆண்டு உழைத்த ஒருவரை நீக்குவது ஆளுமை பண்பா.... சிந்திப்பீர் தோழர்களே...?

செல்வி செ. செயலலிதா அவர்கள் மரணத்தில் உள்ள மர்மம்  பற்றி உலகமே கேள்வி கேட்டது, பல வழக்குகள் நீதிமன்றத்தில் போடப்பட்டது, இதற்கும் திமுக தான் காரணமாம், இதற்கு ஒரு நீதி விசாரணை அமைக்கப்படும் என்று சொன்ன முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் பச்சை துரோகியாம்..... மடியில் கணம் இல்லையென்றால் ஏன் பயம்.....?  விசாரணையை எதிர் கொள்ளவேண்டியது தானே........

 முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களுக்கு முதல்வர் பதவியின் மேல் ஆசை வந்துவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.... உண்மையில் பதவி ஆசை யாருக்கு என்பது மனசாட்சி உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும்....... முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் படிப்படியாக வளர்ந்தவர். ஒரு நாளில் இந்த பதவிக்கு வந்தவர் அல்ல.....  அவர் பின்வாசல் வழியாக கட்சியை பிடிக்கவில்லை......! இன்றும் தனக்கு பொது செயலாளர் பதவி வேண்டுமென்று அவர் சொல்லவில்லை, தன்னை விட அந்த பதவிக்கு தகுதியான நபர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள், அவர்களை முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறார்.....    மக்களும், அதிமுகவினரும் கேட்டு கொண்டால் மீண்டும் அம்மாவின் ஆட்சியை தொடருவேன்....... இல்லையெனில் தன் சொந்த ஊருக்கு சென்று அம்மாவிற்கு ஒரு கோவில் கட்டி அதில் சமூக சேவை செய்து கொண்டு வாழ்ந்து விடுவேன் என்றும், எக்காரணம் கொண்டும் திமுக ஆதரவு தனக்கு தேவையில்லை, மாற்று கட்சியும் தொடங்க மாட்டேன், கடைசி வரை அதிமுக தொண்டனாக தான் இருப்பேன் என்று சொல்லும் பண்ணீர் செல்வத்தின் மேல் பழி போட எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை சசிகலா விற்கு.......

"மக்களுக்காக நான், மக்களால் நான்" என்று சொன்ன புரட்சி தலைவி செல்வி செ.செயலலிதா அவர்கள் பாதையில் வந்தாக சொல்லிக்கொள்ளும் திருமதி சசிகலா  மக்களின் ஆதரவோடு தான் பதவிக்கு வந்தாரா....? தனக்குள்ள மக்கள் ஆதரவு நிரூபித்து காட்டி விட்டு பின் தலைமை பொறுப்பு ஏற்கலாமே.......  ஏன் இப்படி பின்வாசல் வழியாக ஆட்சியையும் கட்சியையும் பிடித்து விட்டு, தனக்கு பதவி ஆசையில்லை என்று சொல்லுவது தமிழ் நாட்டு முட்டாள் ஆக்கும் செயலல்லவா........  உண்மையில் இவருக்கு மக்கள் / எம்.எல்.ஏ கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏன் நேற்று முதல் அவர்களை பேருந்தில் கடத்தி கொண்டு சென்றார்...... அவர்களை ஏன் மறைத்து வைத்துள்ளார் இது முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் சொன்ன நிர்பந்திப்பது அல்லவா........... ?  அமைச்சர்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப விட்டு வேண்டியது தானே.......

தான் பதவி சுகத்தை அனுபவிக்க யாரை வேண்டுமென்றாலும் இழக்க கூடியவர்,  இவருக்கு முத்த நிர்வாகிகள்/ உறுப்பினர்கள் என்பது பற்றியெல்லாம் கவலையில்லை தனக்கு தெரிந்தது எல்லாம் தனக்கு கட்டுப்பட்டவர்கள் விசுவாசி, கட்டுப்படாதவர்கள் துரோகிகள் அவ்வளவே.........

-பிரவின் சுந்தர் பூ.வெ.

Tuesday, February 7, 2017

is Deepa fit for politics..?

முன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இடத்தை அவரது அண்ணன் மகள் தீபா கண்டிப்பாக பூர்த்தி செய்ய முடியாது....

தீபா அவர்களிடம் தொலை நோக்கு பார்வை சுத்தமாக இல்லை.... அரசியல் அனுபவமும் கிடையாது.... இவருடைய தற்போதைய நோக்கம் ஒன்று தான்.....
எரிகிற வீட்டில் கிடைக்கும் வரை லாபம் என்பது தான்..... அதாவது செல்வி செயலலிதா அவர்களின் மரணத்தால் கிடைக்கும் அனுதாப வாக்குகளையும், சசிகலா அவர்கள் மேல் உள்ள எதிர்ப்பு வாக்குகளையும் மொத்தமாக அறுவடை செய்து தான் எம்.எல்.ஏ ஆக வேண்டும் அவ்வளவு தான்.
பத்திரிகையாளர்கள் கேட்டும் எந்தொரு அடிப்படை கேள்விகளுக்கு கூட இவரிடம் பதில்லை..... இவர் சொல்லிய சில பதில்களும் கோமாளித்தனமாக உள்ளது....

"செல்வி செயலலிதா அவர்கள் விட்டு சென்ற பணிகளை நான் தொடருவேன் "- எப்படி...? வெறும் எம்.எல்.ஏ வாக இருந்து கொண்டா .....?

"தமிழகத்தை ஆசியாவின் முதல் மாநிலமாக மாற்றுவேன்.... "- ஒரு எம்.எல்.ஏ வாக இருந்து கொண்டு தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவேன் என்று சொன்னாலே சிரிப்பை அடக்க முடியாது. இதில் ஆசியாவில் முதல் மாநிலமாம்.... :) :) :), இவர் வேண்டுமென்றால் தி.மு.க வின் செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் போல் தனது தொகுதிக்கு ஏதாவது செய்து தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்றலாம்.....
புதிய கட்சி தொடங்க வேண்டுமா அல்லது அதிமுக படகில் ஏறி பயணம் செய்வதா என்பதில் இன்றளவும் தீபாவிடம் தெளிவான பதிலில்லை..... இன்னுமும் குழப்பத்தில் தான் உள்ளார்.... இவர் அதிமுகவில் சேர்ந்தால் அது இவரை நம்பியவர்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம்....

புதிய கட்சி தொடங்கி ஆட்சியை பிடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று..... (இவருக்கு வாக்களிப்பதை விட தேமுதிக விற்கு வாக்களிக்கலாம்.... அங்கு பிரேமலதா விசயகாந்த் அவர்களுக்கு தெரிந்துள்ள தொகுதி பிரச்சனைகள் கூட இவருக்கு தெரிய வாய்ப்பில்லை). இவர் அதிமுகவின் வாக்குகளை பிரிக்க மட்டும் தான் பயன்படுவார் மற்ற விதத்தில் இவரால் தமிழ் நாட்டிற்கு எந்த பயனுமில்லை....
சந்தர்ப்பத்திற்க்காக காத்திருப்பவனை விட, எந்தொரு செயலையும் தனக்கு சாதகமாக மாற்ற தெரிந்தவன் தான் விரைவில் இலக்கை அடைவான். தீபாவிடம் இந்த சாதுர்யம் இருப்பதாக தெரியவில்லை.....

தீபா பகல் கனவு காண்பதை விடுத்து ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்தால் கண்டிப்பாக யோசிக்கலாம்....

-பிரவின் சுந்தர் பூ.வெ.

is Panner Selvam activated by D.M.K or B.J.P..?

திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விலை போகிவிட்டார். அவரை திமுக அல்லது பாஜக ஆட்டி வைக்கிறது என்ற கருத்து மிகமிக கேவலமான கருத்து..... எதிர்கட்சியினரிடமும் நட்பு பாராட்டி சேர்ந்து ஆட்சி நடத்துவது குற்றமா..? இன்னும் எத்தனை காலம் தான் எதிர்ப்பு அரசியல் செய்து மக்களை ஏமாற்றுவார்கள்..?

திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் விசுவாசத்தை உலகுறியும்.....  தனக்கு நடந்த அவமானங்களை வெளியே சொன்னது குற்றமா..? அவர் சுமத்திய அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் உள்ளது....  இந்த 60 நாட்களில் அவருக்கு இவர்கள் கொடுத்த மன உளைச்சல் அளவே கிடையாது.....

கட்சிக்கு தன்னால் பங்கம் ஏற்பட்டு விட கூடாது என்று தான் ஒவ்வொரு தொண்டனும் அமைதியாக இருக்கிறான்...  அதை இவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு செய்த அரசியல் மிகவும் கீழ்தரமானது... திருமதி சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் அறிக்கைகளும் பேட்டிகளும் மிகவும் எரிச்சல் தரக்கூடியதாக இருந்தது.....

திருமதி  சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தார் செய்யும் கேவலமான அரசியலுக்கு உடன்படுபவர்கள் விசுவாசி, உடன்படாதவர்கள் விலை போகிவிட்டார்கள் என்பது சனநாயகத்திற்கு எதிரான ஒரு கருத்து....

இன்று பன்னீர் செல்வத்தின் பெட்டிக்கு திமுக மற்றும் பாஜக காரணம் என்று சொல்வது,  உண்மையை திசை திருப்பம் செயலாக தான் பார்க்க முடிகிறது. காரணம் பின்வரும் நிகழ்வுகள்.....

நிகழ்வு 1: இதுவரை உள்ள நடைமுறையில், தமிழகத்தை ஆளும் முதல்வர் டெல்லி சென்றால் அவரை அங்குள்ள எம்.பி கள் வரவேற்று முதல்வர் செல்லும் வரை அவர் கூட இருந்து அவரை வழியனுப்புவது தான் முறை... ஆனால் திரு பன்னீர் செல்வம் அவர்கள் முதல் முறை டெல்லி சென்ற போது அவரை வரவேற்க திரு தம்பிதுரை மட்டும் தான் விமான நிலையத்திற்கு வந்தார்,  அவரும் முதல்வர் மற்றும் பிரதமர் சந்திப்பின் போது முதல்வர் தன்னிச்சையாக பேசுகிறார் என்று காரணம் காட்டி பாதியிலே சென்று  விட்டார்..... பிரதமருடன் சந்திப்பு முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் வேளையில் அவரை வழியனுப்ப ஒருவரும் செல்லவில்லை.... துணைக்கு போன அப்போதய தலைமை செயலர் திரு ராம் மோகன் ராவ் கூட தனுக்கு டெல்லியில் வேலை இருப்பதாக கூறி விலகி கொண்டார்....  இது முதல்வருக்கு நடக்கும் அவமானமல்லவா, இதே நடைமுறையை செல்வி செயலலிதா அவர்களுக்கு செய்து இருப்பார்களா...? இப்படி புறக்கணித்தவர்கள் மேல் ஏன் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை..?  இந்த நிகழ்வில் எங்கே திமுக பாஜகவை தொடர்பு படுத்த முடியும்.....?

நிகழ்வு 2: ஒரு முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ கள், அவருக்கு எதிராகவும் , தொடர்ந்து வேறு ஒருவருக்கு ஆதரவாகவும்  பேட்டியளித்து வரும் நிலையில்  ஏன் இதை கட்சியின் தலைமை தடுக்கவில்லை..?  இது யார் தவறு...? இதில் உச்சகட்டமாக மக்களவை துணை சபாநாயகர் (கட்சி பாகுபாடு இன்றி பொதுவாக செயல்பட வேண்டியவர்) அவருடைய லெட்டர் பைடில் திருமதி சசிகலா தான் முதல்வராக வேண்டும் என்று சொல்லுவது எவ்வகையில் நியாயம்....?  கட்சியும் தலைமையும் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என்ற இற வெங்காய கதைகள் பேசுபவர்கள், ஏன் செல்வி செயலலிதா அவர்கள் இறந்த அன்றை திருமதி சசிகலாவை முன்மொழிந்து இருந்திருக்க கூடாது....?

நிகழ்வு 3: சல்லிக்கட்டு விசயத்திற்க்காக பிரதமரை சந்திப்பதாக திரு தம்பிதுரை அவர்கள் தலைமையில் எம்.பி.கள் முதல் முறை சென்ற போது அவர்கள் திருமதி சசிகலா சார்பாக தான் சென்றார்கள், அங்கு எந்த ஒரு இடத்திலும் முதல்வர் பெயர் சொல்லவேயில்லை...... அவர்களின் முழு துதியும் சசிகலா மேல் தான் இருந்தது.... இது முதல்வருக்கு அவமானம் இல்லையா...?

நிகழ்வு 4: இதே  பிரச்னை முன்னிறுத்தி முதல்வர் திரு பன்னீர் செல்வம் அவர்கள் பிரதமரை சந்திக்க சென்ற போது வேண்டுமென்றே போட்டியாக திரு தம்பிதுரை சார்பாக பிரதமரை சந்திக்க சென்றது கேவலமாக இல்லையா...? இது தமிழ்நாட்டிற்க்கே ஒரு இழுக்காக தெரியவில்லையா...?  மத்தியரசின் துணையால் சல்லிக்கட்டிற்கு நடுத்துவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு இருந்த நிலையில் மத்தியரசை வசைபாடியது தேவையா..?. இப்படி தொடர்ந்து தன்னிசையாக செயல்பட்டு வந்த திரு தம்பிதுரையை ஏன் கட்சியின் தலைமை கட்டுப்படுத்தவில்லை..?  இவர்களையெல்லாம் கட்டுப்படுத்தாமல் பண்ணீர் மேல் மட்டும் நடவடிக்கை ஏன்..? சென்னை மெரினா கலவரத்தில் தவறு செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க விசாரணை குழு அமைத்ததனாலா..?

இதுப்போல பல நிகழ்வுகளை சொல்லிக்கொன்டே போகலாம்..... செய்யும் தவறு எல்லாம் இவர்கள் செய்து விட்டு மற்றவர்கள் மேல் பழிபோடுவது தவறு......

இன்று திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை பொருளார் பதவியிலிருந்து நீக்குவதாக திருமதி சசிகலா கூறுகிறார்.... முதலில் அவருக்கு அந்த தகுதி உள்ளதா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.... இரண்டாவது திரு ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினால் கட்சிக்கு தான் பாதிப்பு அவருக்கு அல்ல....

திருமதி சசிகலாவின் கையில் அதிமுக என்பது குரங்கு கையில் பூமாலை என்பது போல தான் உள்ளது....  புரட்சி தலைவர் என்றும் எங்கள் இதய தெய்வம் திரு எம்.சி.ஆர் அவர்கள் தொடங்கிய  கட்சியை, செல்வி செயலலிதா  அவர்கள் அரண் போல காத்து வந்த மாபெரும் இயக்கத்தை குழி தோண்டி புதைக்காமல் சசிகலா விடமாட்டார் போல் இருக்கிறது....

சசிகலா புஷ்பா முதல் கே.பி.முனிசாமி, பி.எச்.பாண்டியன்,மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர் செல்வம் என்று எதிர்ப்பாளர்கள் பட்டியல் நீண்டுக்கொன்டே போகிறது......

-பிரவின் சுந்தர் பூ.வெ.