உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10
தற்கொலை என்பது உலகத்தில் பொதுவாகக் காணப்படுகின்ற மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட சமூக நலப் பிரச்சனையாகும். பிற பிரச்சனைகள் போல இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நோய், விபத்துக்கள்,போர்கள் இவற்றால் இறப்பவர்களுக்குச் சமனாக அல்லது அதற்கும் அதிகமாகத் தற்கொலையினால் தற்பொழுது இறப்பவர்களின் எண்ணிக்கை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இதயநோய், சர்க்கரை வியாதி, எய்ட்ஸ் - போன்ற நோய்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க உலக அளவில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து இருப்பதுப்போல ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் நாள் World Suicide Prevention Day (WSPD) தற்கொலை தடுப்பு நாள் கொண்டாடப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு துவங்கி ஒவ்வொரு ஆண்டும் "தற்கொலையைத் தடுப்போம்"," நம்பிக்கையை விதைத்து உயிர்களைக் காப்போம்","விரிவாகச் சிந்திப்போம், நாட்டளவில் திட்டமிடுவோம், ஊர்களில் செயல்படுத்துவோம் ", "பலதரப்பட்ட கலாச்சாரங்களில் தற்கொலை தடுப்பு", "குடும்பங்கள், அமைப்புகள், தற்கொலைகள் "," உலகளாவிய அளவில் நம்பிக்கை ஒளி ஏற்றி தற்காப்புகளை பலப்படுத்துவோம்" போன்ற பலபல தலைப்புகளில் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தற்கொலை தடுப்பு அகில உலக அமைப்பு.
உலகில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். நாள் ஒன்றுக்கு 3,000 பேர் தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இப்படி மடிகின்றனர். 15 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் இறந்து போவதற்கான காரணங்களில் தற்கொலை இரண்டாவது காரணமாக இருக்கிறது.
நம் நாட்டில் லட்சத்துக்கு 16 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 3 % தற்கொலைகள். இதில் 40 % பேர் ஆண்கள், 60 % பேர் பெண்கள்.
ஏன் இந்த எண்ணம்?
அதிகார நாட்டம், பேராசை, சுயநலம், பொறாமை, பொறுமையின்மை, சிந்தித்துச் செயல்படாமை, மூடநம்பிக்கை, உணர்ச்சி வசப்பட்டு செயல்படல், ஓய்வின்மை, தெளிவின்மை, இலக்கின்மை, சரியான வழிகாட்டலும் அறிவுறுத்தலும் இன்மை, தன்னம்பிக்கை யின்மை, உள்ள உறுதியின்மை, தோல்வியில் துவளல், சோதனைகளை எதிர்கொள்ளும் திடமின்மை, விடாமுயற்சியின்மை, விமர்சனங்களுக்கு அஞ்சுவது, இழப்பைத் தாங்கும் உறுதியின்மை போன்றவை ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? இவர்கள் நினைக்கின்றார்கள் பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது என்று . பிரச்சினைக்குத் தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது ஏழைக்குப் பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை. பெற்ற மக்களால் சிலருக்குப் பிரச்சினை ; மக்களைப் பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள் சிலருக்கு .ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது.நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாகச் சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. Imipramine receptors என்பவை செரடோனின் சுரக்கும் இடங்கள். தற்கொலை செய்துகொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தபோது இவை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. செரடோனின் சுரத்தலைத் தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணத்தைக் குறைக்கலாமாம்.
காரணங்கள்
இன்றைக்கு ஆரம்பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். காதல் தோல்வியோ தேர்வில் தோல்வியோ மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மரணத்தைத்தான்.மதிப்பெண் குறித்த கண்ணோட்டத்துடனேதான் மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் வாங்கினால்தான் மதிப்பு என்று பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம். நூறு சதவிகித தேர்ச்சிக்காகப் பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் அனைத்தும் சேர்ந்துதான் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன .கல்விக் கூடங்களில் தோல்வியைத் தைரியமாக எதிர்கொள்வது குறித்த எதார்த்தத்தைக் கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்குக் காரணம்.கல்விக் கூடங்களில் சூழ்நிலை மாறினாலே மாணவர்களின் நிலை மாறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
வறுமை, பெரும் கடன் சுமைகளின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிகொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாகத் தலையீடு செய்து, தொடரும் இந்த அவல நிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
பாலியல் வன்முறையால் இந்த முடிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கூடிவரும் இந்த நாளில் தக்க பாதுகாப்பு அவர்களுக்குத் தரவேண்டியது சமூகத்தின் கடமையாகும்.
தடுப்பு நாள்
தற்கொலைகளைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேசத் தற்கொலை தடுப்புக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதியை உலகத் தற்கொலை தடுப்பு நாளாக அனுசரித்து வருகின்றன. 2003 முதல் இது அனுசரிக்கப்படுகிறது.
இந்த 12வது உலகத் தற்கொலை தடுப்பு நாளின் மையக் கருத்து ‘தற்கொலைத் தடுப்பில் ஒருங்கிணைந்த செயலாக்கம்'.
நம் பங்கு
தற்கொலை முயற்சி செய்பவர்கள் எல்லோரும் மன வளர்ச்சி குறைந்தவர்கள் அல்ல.நல்ல மன நலம் உள்ளவர்களும் கூட, தாங்கள் அனுபவித்து வரும் துக்கத்திலிருந்து, அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற தற்கொலையை எளிமையான வழி என்று நினைக்கிறார்கள்.இது கொடுமையான மூர்க்கத்தனமான செயலாகும்.இது சுய நலத்தின் உச்சம். தற்கொலை முடிவு என்பது நொடிப்பொழுது உணர்ச்சி உந்தலின் விளைவாகும். புரிய அவகாசம் கொடுக்காத இடத்தில் தான் விரக்தி ஏற்படுகிறது. விரக்தி தான் மேலும் சிந்திக்க விடாது மரணப் பள்ளத்துள் தள்ளுகிறது. இது கோழைத்தனமான முடிவு என்று சொல்கிறோம். ஆனால் தற்கொலை செய்துகொள்ள தைரியம் வேண்டும்.
தற்கொலைக்கு முயல்பவர்கள் கட்டாயமாக அது பற்றித் தன் நெருங்கிய தோழர்களிடம் - “நான் இறந்திருக்கலாம்” என்றோ “நான் போன பிறகுதான் என் அருமை புரியும்” என்பது போலவோ இவர்கள் பேசத் துவங்குகிறார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மன வலியிலிருந்து மீள வேறு வழி இருப்பது தெரிந்தால் தற்கொலை முயற்சி செய்யும் ஒவ்வொருவரும் வாழவே விரும்புவார்கள் என்பதே உண்மை.
தற்கொலை முயற்சி செய்யும் ஒருவருக்கு நாம் எப்படி உதவலாம்?
அவர்கள் தங்கள் துக்கத்தையோ ஏமாற்றத்தையோ வெளியிடும் போது விமரிசனம் செய்யாமல் முழுக் கவனத்துடன் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது உணர்வுகளை மதியுங்கள்.தனக்கென ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு தற்கொலை முயற்சியில் இருந்து ஒருவரை மீட்கும்.
அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை காப்பாற்றுங்கள். அவரது ரகசியம் உங்கள் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படாது என்றும் எந்தச் சூழ்நிலையிலும் உங்களது நட்பு மாறாது என்றும் நம்பிக்கையும் உத்திரவாதமும் கொடுங்கள்.
அவரிடம் நீங்கள் எத்தனை அன்பும் அக்கறையும் உடையவர் என்பதை வெளிப் படுத்துங்கள். உங்கள் கனிவும் கருணையும் நிறைந்த சொற்கள் அவரது மனப் புண்ணுக்கு ஆறுதல் அளிக்கட்டும்.
முடிந்து போனவற்றைக் கிளறாதீர்கள். முடிந்தவை முடிந்தவைகளாகவே இருக்கட்டும்.புதிய கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்க அவருக்கு உதவுங்கள்.
ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மனித நேயம் வேறு ஏதாவது உண்டா?இது போன்றவைகளின் வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.
மேற்கூறிய முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றால் கவுன்சிலிங் தரும் அமைப்புகளை நாடுங்கள்.
சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்கள் தற்கொலை நிகழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டாமல் மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக உதவ வேண்டும்.
தமிழகத்தில் மனநோய்களுக்கான மருத்துவச் சிகிச்சை நடமாடும் மாவட்ட மனநலத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே மனநல மாற்றம் காரணமாக ஏற்படும் தற்கொலை எண்ணத்தைத் தடுக்க உரிய மருந்துகளை இலவசமாகப் பெறலாம்.
மேலும் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 104 மருத்துவ ஆலோசனை உதவி எண் மூலம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெளிவு பெற முடியும். சமூகத்தில் நடக்கும் தற்கொலைகளைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒரு சமூகமாக நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதே இதற்குத் தீர்வு.
தனிமைப்பட்டு இருப்பவர்களிடம்தான் அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன. குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளைப் பெருமளவு தடுக்க முடியும்.
தற்கொலையில் வெற்றிபெறாமல் காப்பாற்றப் பட்டவர்களின் நிலை, முந்தியதைக்காடிலும் பரிதாபமானது - சமூகத்திலும் குடும்பத்திலும், மற்றவரைச் சார்ந்தே இருக்க வேண்டிய அவலம்.
தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான வேலைதான்.“அரிது அரிது மானிடரைப் பிறத்தல் அரிது”.இயற்கையில் மலர்வதும் உதிர்வதும் யதார்த்தமென்றால் பிறப்பதும் இறப்பதும் இயற்கையாகவே நிகழவேண்டுமல்லவா? இறப்பு அது வரும்போது வரட்டும். அதுவரை வாழ்ந்துக்கொண்டிருப்போம்.
தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, சுயநலம், என தனது எனும் இடத்திலுள்ள அத்தனையயும் கொன்றுவிட்டு மற்ற மனிதர்களோடு இணங்கி, அவர்களையும் நம்மைப்போலவே எண்ணி, மதித்து, மற்றவர்களையும் வாழ்வித்து நாமும் வாழ்வோம்.வாழ்வது ஒரு முறைதான். வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்.
இலவச உளவியல் ஆலோசனை
தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060 நேரடியாக காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலோசனை பெறலாம். முகவரி: 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028
மின்னஞ்சல் தொடர்புகொள்ள: help@snehaindia.org
புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, இணணய முகவரி: www.maitreyi.org.in நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அணுகலாம். முகவரி: 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001
மற்ற மாநிலங்களில் உள்ள தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை மையங்கள்.
மாநிலம்: தெலங்கான
ROSHNI
1-8-303/48/21 Kalavathy Nivas,
Sindhi Colony
S.P. Road
SECUNDERABAD – 500003
Andhra Pradesh
Contact by: Face to Face – Phone – Letter:
Helpline 1: 9166202000
Helpline 2: 9127848584
Email Helpline: help@roshnihyd.org
மாநிலம்: குஜராத்
Saath
B12 Nilamber Complex
H.L. Commerce College Road
Navrangpura
AHMEDABAD-380 006
Gujarat
Helpline 1: +91 79 2630 5544
Helpline 2: +91 79 2630 0222
மாநிலம்: கேரளா
MAITHRI – Cochin
ICTA – Santigram
Changampuzha Nagar (P.O.)
Kalamassery, Ernakulam
Kochi– 682033
KERALA
Helpline 1: +91 (0)484 2540530
Website: www.maithrikochi.org
மாநிலம்: மகாராஷ்ட
The Samaritans, Helpline
c/o Lowjee Wadia Trust
Riddhi Siddhi CHS, Next to Lal Baug Police Chowky
Dr. B. Ambedkar Road, Parel
MUMBAI –400 012
Maharashtra
Helpline 1: +91-22-32473267
Website: www.mumbainet.com/health/samarita.htm
Opening hours: Mon, Tues, Wed, Thurs, Fri: 15:00 – 21:00
AASRA
104, Sunrise Arcade
Plot 100, Sector 16
Koparkhairane
NAVI MUMBAI –400 701
Maharashtra
Helpline 1: +91 22 2754 6669
Website: www.aasra.info
மாநிலம் : புது டெல்லி
Sumaitri
1 Bhagwandas Lane
Aradhana Hostel Complex
Basement
NEW DELHI – 110 001
Helpline 1: 2338 9090
Website: www.sumaitri.org
Opening hours: Mon, Tues, Wed, Thurs, Fri: 14:00 – 22:00
மாநிலம் : மேற்கு வங்காளம்
Lifeline Foundation
KOLKATA
West Bengal
Helpline 1: +91 2463 7401/7432
Helpline 2: +91 2474 5886
Website: www.lifelinekolkata.org
Email Helpline: reach@lifelinekolkata.org
மாநிலம் : கர்நாடக
SAHAI
47 Pottery Road
Frazer Town
Bangalore – 560005
Karnataka
Contact by: 2549 7777
Website: www.mpa.org.in