"Digital India" வை ஊக்குவிக்க பல ஆயிரம் கோடி செலவு செய்து பரிசு தரும் அரசுக்கு, தொடர்கதையாய் இருக்கும் விவசாயின் துயரங்கள் தெரியாது ஏனோ...?
தினம் தினம் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகள் அல்ல- நம் நாட்டின் பொக்கிஷங்கள், புதைக்கப்படுவது விவசாயிகள் மட்டுமல்ல- நம் நாட்டின் முதுகெலும்பும் தான், இது இப்படியே போனால் இனி வரும் காலங்களில் விவசாயத்தையும், விவசாயிகள் பற்றியும் நாம் வரலாறு பாடங்களில் தான் பார்க்க வேண்டும்..
"Digital India" , கடலில் சிலைகள் என பல்லாயிரம் கோடிகள் வீண் செலவு செய்யும் அரசால் விவசாய நாட்டில் விவசாயிகளின் துயரத்திற்கு ஒரு முடிவு கட்ட முடியவில்லையே...... என்று கிடைக்கும் இவர்களுக்கு விடிவெள்ளி..?
விவசாயத்தையும், விவசாயியையும் மேம்படுத்த தனியாக வரி வசூலிக்கிறது அரசு, இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் வாடிக்கையாளர் மையங்கள் ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆலோசனைகள் தருவதாக அரசு சொல்கிறது, இருந்தும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க முடியவில்லையே....
பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதற்கு வட்டியும் கட்டாமல், அசலும் கட்டாமல் சொகுசாக வாழும் அயோக்கியர்கள் அல்ல இவர்கள், வாங்கிய சில லட்சங்கள் கொடுக்க முடியாமல், வளர்த்த செடியும் வாடிய போது மனம் வருந்தி தற்கொலை செய்து கொள்ளும் அப்பாவிகள்..... இவர்களை காப்பாற்ற என்ன நடவடிக்கைகள் எடுத்தது அரசு.....?
பொய்த்து போன மழையை நாம் குறை சொல்ல முடியாது.... மழை பெய்தால் அந்த தண்ணீர் சேமித்து வைக்க ஏற்பாடுகள் செய்து இருக்கிறதா...?...
ஒருபுறம் தினம் தோறும் அள்ளப்படும் ஆற்று மணல், தென்னிந்தியா முழுக்க மத்திய அரசின் ரயில்நீர் (Railneer) பாட்டில்களுக்கு நம் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது, மாநில அரசின் அம்மா குடிநீர் திட்டமும் இம்மாவட்டத்திலிருந்த தான் தண்ணீர் எடுக்க படுகிறது, இது போதாது என்று பெரும்பாலான மது ஆலை நிறுவங்களும் இதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது.... ஒரு புறம் கோடி கணக்கில் லிட்டர் லிட்டராக தண்ணீர் எடுக்க(உறிஞ்ச) படுகிறது மறுபுறம் தண்ணீர் இல்லாமல் பல மாவட்டங்கள் தவிக்கிறது......
நதி நீர் இணைப்பு செய்து அணைத்து மாவட்டங்களையும் தண்ணீர் கிடைக்க செய்யலாமே. நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள நதிநீர் இணைப்பு திட்டம் என்னானது...? அதற்கு செலவு செய்யலாமே பல ஆயிரம் கோடி..... இதற்காக மாநில அரசைகளை கட்டாயப்படுத்தி இத்திட்டம் கொண்டு வரலாமே......! ஏன் இந்த திட்டம் தொடங்கிய இடத்திலே பல வருடங்களாக அப்படியே தூங்கிக்கொண்டு இருக்கிறது.....? ,
ஒரு வருட காலத்தில், ஆந்திராவில் கோதாவரி- கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் அவர்கள் சாத்தியப்படுத்தி எப்படி காட்ட முடிந்தது..?, தமிழ்நாடு நதிநீர் இணைப்பிற்குகாக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கேட்ட நிதி, பல ஆண்டுகளாக நிலுவையில் தான் உள்ளது....?. ஒரு வேலை மாநில அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றால் மத்தியரசே எடுத்து செய்யலாமே.....?
நாட்டின் கட்டமைப்பிற்கு செலவு செய்யுங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை, அதற்கு முன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்....
பசி என்று வந்தால் டெபிட் கார்டையோ, அல்லது கிரெடிட் கார்டையோ அல்லது பணத்தையோ திங்க முடியாது..... சோறும், காய்கறியும் வேண்டும்...... அதற்கு விவசாயிகளும், விவசாயமும் தேவை.....
#savefarmers
-பிரவின் சுந்தர் பு.வெ
No comments:
Post a Comment